Header Ads

இனப்படுகொலை தொடர்பில் மக்கள் தீர்ப்பாய தீர்ப்பினை ஆராயவேண்டும்: ஆனந்தி சசிதரன் கோரிக்கை


இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலை தொடர்பில் நெதர்லாந்திலுள்ள மக்கள் தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பினை ஐ.நா மனித உரிமைகள் பேரவை ஆராய வேண்டுமென ஈழத்தமிழர் சுயாட்சி கழகத்தின் செயலாளரும் வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான ஆனந்தி சசிதரன் வலியுறுத்தியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானங்களில் பூகோள அரசியல் தாக்கம் செலுத்துவதாக தீர்ப்பாயத்தின் தீர்ப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் நேற்று முன்தினம்  உரையாற்றிய போது ஆனந்தி சசிதரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிகையில், இலங்கையில் பல தசாப்தங்களாக தொடர்ந்து வரும் இனவாதம் மற்றும் பாகுபாடுகள் தொடர்பான பிரச்சினைகள் காரணமாக நாட்டின் கலாச்சாரம் மற்றும் கட்டமைப்பு ஆகியன பாதிக்கப்பட்டுள்ளதோடு உடல் ரீதியில் பலர் இனப்படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.

இனப்படுகொலை தொடர்பில் சர்வதேச விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென தமிழ் மக்கள் தொடர்ந்தும் கோரி வருகின்றனர்.

அவர்களது கோரிக்கையை முன்வைக்கும் முகமாக கடந்த 10 ஆண்டுகளாக, பாதிக்கப்பட்டவராக மற்றும் தெரிவு செய்யப்பட்ட மாகாண சபை உறுப்பினராக நான் இதில் பங்கு கொள்கிறேன்.

எனினும், பேரவை பொறுப்புக்கூரல் விடயத்தில் மாத்திரம் அதிக கவனம் செலுத்தியது. இனப்படுகொலைக்கு தீர்வு காண்பதன் முக்கிய அம்சமாகிய சர்வதேச விசாரணைக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படவில்லை.

இலங்கை தொடர்பில் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மேற்கத்திய நாடுகளால் தயாரிக்கப்பட்டவை. இனப்படுகொலைக்கான நீதி கிடைக்காமை குறித்து நிரந்தர மக்கள் தீர்ப்பாயத்தால் கடந்த செப்டெம்பர் மாதம் வழங்கப்பட்ட தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானங்களில் பூகோள அரசியல் கொண்டுள்ள தாக்கம் குறித்தும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நிரந்தர மக்கள் தீர்ப்பாயத்தால் வழங்கப்பட்ட தீர்ப்பை ஆராயுமாறு நான் பேரவையிடம் கோருகிறேன்.

இதனடிப்படையில், பேரவையின் தவறை அறிந்து அதனை சரி செய்ய தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு நான் கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார். 



No comments

Powered by Blogger.