நிர்வாக முடக்கத்தை மேற்கொள்ளுமாறு தமிழ் அரசுக் கட்சி வேண்டுகோள்!
வடக்கு கிழக்கில் நிர்வாக முடக்கத்தை மேற்கொள்ளுமாறு இலங்கை தமிழ் அரசுக் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது தொடர்பில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் வெளியிட்ட செய்திக் குறிப்பிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தி குறிப்பில், முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜா, தனது நீதித்துறை கடமைகளை செய்த காரணத்தினால் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு பதவி விலக்கம் செய்து நாட்டை விட்டு வெளியேற நிர்பந்திக்கப்பட்டதை எதிர்த்து எதிர்வரும் 20 ஆம் திகதி வடக்கு கிழக்கில் நிர்வாக முடக்கத்தை மேற்கொள்ளுமாறு இலங்கை தமிழ் அரசுக் கட்சி சார்பில் அனைத்து மக்களையும் கேட்டுக் கொள்ளுகிறோம்.
இந்த நிர்வாக முடக்கம் நடவடிக்கை மூலம் தமிழ் நீதிபதி ஒருவருக்கு நிகழ்ந்த இந்த மிக மோசமான செயற்பாட்டை திரும்ப திரும்ப உலகுக்கு எடுத்தக் காட்ட நாம் கடமைப்பட்டுள்ளோம்.
ஆகவே இது சம்பந்தமாக அனைவரினதும் ஒத்துழைப்பையும் முழுமையாக எதிர்பார்க்கிறோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments