Header Ads

இஸ்ரேல் மீதான ஹமாஸின் தாக்குதலில் அமெரிக்கர்கள் 22 பேர் உயிரிழப்பு!


இஸ்ரேல் மீதான ஹமாஸின் தாக்குதலில் 22 அமெரிக்கர்கள் உயிரிழந்துள்ளனர். 17 பேரை காணவில்லை என்றும் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

பாலஸ்தீனத்தின் காசா நகரில் ஆதிக்கம் செலுத்தும் ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது கடந்த 7 ஆம் திகதி தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடியாக காசா மீது இஸ்ரேல் இராணுவம் தாக்குதலைத் தொடங்கியது. கடந்த 6 நாட்களாக ஹமாஸ் அமைப்புக்கும் இஸ்ரேல் இராணுவத்துக்கும் இடையே போர் நீடித்து வருகிறது.

தாக்குதல் தொடங்கிய முதல் நாளில் ஹமாஸ் அமைப்பினர் நூற்றுக்கணக்கான இஸ்ரேல் மக்களை பணயக் கைதியாக பிடித்துச் சென்றனர். இஸ்ரேல் இராணுவம் வீசும் ஒவ்வொரு குண்டுக்கும் ஒருபிணைக் கைதியைக் கொல்வோம் என அவர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.

பிணைக்கைதியாக பிடிக்கப்பட்டவர்களில் அமெரிக்கர்களும் உள்ளனர். இந்த நிலையில் பணயக் கைதியாக தடுத்துவைக்கப்பட்டுள்ள அமெரிக்கர்களை மீட்கும் பணியில் அமெரிக்க அரசு தீவிரம் காட்டி வருகிறது.

இது குறித்து அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் கூறுகையில், இஸ்ரேல் மீதான ஹமாஸின் தாக்குதலில் 22 பேர் உயிரிழந்துள்ளனர். 17 பேரை காணவில்லை. இந்த எண்ணிக்கை வரும் நாட்களில் அதிகரிக்கக்கூடும். ஹமாஸ் அமைப்பினர் அமெரிக்கர்களையும் பணயக் கைதியாக வைத்துள்ளனர். அவர்களை மீட்பது குறித்து இஸ்ரேலுடன் அமெரிக்க அரசு தொடர்ந்து பேசி வருகிறது என்று தெரிவித்தார்.

காசா மீதான தாக்குதலுக்கு தேவையான இராணுவ உதவியை இஸ்ரேலுக்கு அமெரிக்கா வழங்கி வருகிறது.

இந்தப் போரில் இஸ்ரேல் தரப்பில் இது வரையில் 1,200 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 3 ஆயிரம் பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் பாலஸ்தீனத்தில் 1,300 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 6 ஆயிரம் பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என கூறப்படுகிறது. 

No comments

Powered by Blogger.