Header Ads

இஸ்ரேல் இராணுவம் நடத்திய தாக்குதலில் காஸாவில் 198 பாலஸ்தீனியர்கள் உயிரிழப்பு


ஹமாஸ் பயங்கரவாதிகள் தாக்குதலால் இஸ்ரேலில் 100 பேர் வரை உயிரிழந்துள்ளனர். அதேபோல் காசா பகுதியில் இஸ்ரேல் இராணுவம் நடத்திய தாக்குதலில் 198 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் நேற்று காலை முதல் திடீர் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். ஹமாஸ் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் நான்கு சக்கர வாகனங்களில் இஸ்ரேலுக்குள் நுழைந்து அங்கு கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தி வருகின்றனர். ஒவ்வொரு இளைஞரும் கைகளில் நவீன ரக துப்பாக்கிகளை ஏந்தியவாறு வீதிகளில் சுற்றித் திரியும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன.

அதோடு, ஏவுகணைகளைக் கொண்டும் ஹமாஸ் இயக்கத்தினர் இஸ்ரேலின் நிலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது என  செய்திகள் வெளியாகி உள்ளன. 

நேற்று காலை 8 மணி தொடங்கி 2 மணி நேரத்தில் இஸ்ரேல் முழுவதும் பல பகுதிகளிலும் ஏவுகணைகள் துளைத்தெடுத்தன. சற்றும் எதிர்பாராத இந்தத் தாக்குதலால் மக்கள் அதிர்ச்சிக்கு உள்ளான சூழலில் ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேலுக்குள் நுழைந்தனர். 

ஹமாஸ் பயங்கரவாதிகள் தாக்குதலால் இஸ்ரேலில் 100 பேர் வரை உயிரிழந்துள்ளனர் என அந்த நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது. மேலும் இராணுவ வீரர்களையும், பொதுமக்களையும் ஹமாஸ் பயங்கரவாதிகள் சிறைபிடித்துள்ளனர் என்றும் தெரிவித்துள்ளது.

இதனிடையே, ஹமாஸ் பயங்கரவாதிகள் தாக்குதலை எதிர்கொள்ளும் வகையில் இஸ்ரேல் படையினரும் பதில் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் 198 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

இஸ்ரேல் - பாலஸ்தீனத்துக்கு இடையே தன்னாட்சி பெற்ற பகுதியாக காசா முனை பகுதி உள்ளது. இந்தப் பகுதி ஹமாஸ் போராளிகளின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. இந்த அமைப்பை பயங்கரவாத இயக்கமாக இஸ்ரேல் கருதுகிறது. இவ்வமைப்புத்தான் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது என்பது இஸ்ரேலின் நீண்ட கால குற்றச்சாட்டு. ஹமாஸுக்கு தேவையான நிதி உதவிகளை ஈரான் செய்து வருவதாகவும் இஸ்ரேல் கூறிவருகிறது.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹூ கூறுகையில், நாங்கள் யுத்தம் செய்கிறோம். அதில் நாங்களே வெல்வோம். எங்களின் எதிரி யோசித்துப் பார்த்திராத விலையைக் கொடுக்க நேரிடும் என்று கூறியுள்ளார்.


இதற்கிடையில், ஹமாஸ் அமைப்பு ஆயிரக்கணக்கான ஏவுகணைகள் கொண்டு தாக்குதல் நடத்தியதாக ஒப்புக் கொண்டுள்ளது. மேலும், இஸ்ரேல் நாட்டு வீரர்களை பிணையாகப் பிடித்து வைத்துள்ளதாகவும் கூறியது. சனிக்கிழமை மதியம் வரை பொதுமக்களில் 22 பேர் உயிரிழந்ததாக இஸ்ரேல் நாட்டின் மருத்துவமனைகளில் இருந்து கிடைக்கப்பெற்ற தகவல்கள் உறுதி செய்துள்ளது.

பாலஸ்தீனத்துக்குள் அத்துமீறி குடியேறுபவர்களுக்கு எதிராகவும், பாலஸ்தீனத்தை ஆக்கிரமிக்கும் துருப்புகளின் பயங்கரவாதத்துக்கு எதிராகவும் தங்களை தற்காத்துக் கொள்ளும் உரிமை என்பது பாலஸ்தீனியர்களுக்கு உண்டு என்று பாலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் கூறியுள்ளார் என செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.

இந்தத் தாக்குதலை அடுத்து பாலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ், உயர் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை மேற்கொண்டுள்ளார் எனவும்  அதில் பாலஸ்தீன மக்களுக்கு பாதுகாப்பு வழங்கவும், பாலஸ்தீன மக்களின் உறுதியை வலுப்படுத்தத் தேவையான அனைத்து நடவடிக்கைகளை எடுக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார் என்றும் செய்தி வெளியாகி உள்ளது. 



No comments

Powered by Blogger.