மாமனார்களை வாளால் தாக்கிய இரு மருமகன்கள் கைது!
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள இரு பிரதேசங்களில் இரு வெவ்வேறு சம்பவங்களில் இரு மனைவிமார்களின் தந்தைகளான மாமன்மாரை வாளால் வெட்டிய இருவரையும் மற்றும் துவிச்சக்கரவண்டி திருடிய இளைஞர் என 3 பேரை நேற்று செவ்வாய்க்கிழமை (12) கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
புதூர் பிரதேசத்தில் கடந்த சனிக்கிழமை (9) மதுபோதையில் மனைவியின் தந்தையை வாளால் வெட்டி தாக்குதல் நடத்தியதையடுத்து குறித்த தந்தை தலையிலும் கையிலும் படுகாயமடைந்த நிலையில் மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
அதனையடுத்து, தாக்குதல் நடத்திய 30 வயது மருமகன் தப்பியோடி தலைமறைவான நிலையில் நேற்று (12) மாலை கைது செய்யப்பட்டார்.
அதேவேளை கடந்த ஞாயிற்றுக்கிழமை (10) மாமாங்கம் பகுதியில் மதுபோதையில் மனைவியுடன் ஏற்பட்ட சண்டையின்போது மனைவியின் தந்தையை வாளால் வெட்டி நபரொருவர் தாக்குதல் நடத்தியுள்ளார்.
அதனையடுத்து, மாமனார் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
மாமனாரை தாக்கிய அந்த மருமகன் தப்பியோடி தலைமறைவான நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை (12) கைது செய்யப்பட்டார்.
மேலும், புளியம் தீவு அதிகாரி வீதியில் வீடு ஒன்றில் வேலி அடைக்கும் வேலையில் ஈடுபட்டிருந்த 22 வயது இளைஞர் ஒருவர் அங்கிருந்த 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான துவிச்சக்கரவண்டி ஒன்றை திருடிச் சென்றுள்ளார்.
அதன் பின்னர் சிசிடிவி கமராவில் பதிவாகிய வீடியோவின் மூலம் சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டு நேற்று (12) கைது செய்யப்பட்டார்.
இந்த மூன்று வெவ்வேறு சம்பவங்களில் கைது செய்யப்பட்ட 3 பேரையும் நேற்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் பீற்றர் போல் முன்னிலையில் ஆஜர்படுத்தியபோது வாள்வெட்டுத் தாக்குதலுக்குள்ளாகி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய மாமாங்கத்தைச் சேர்ந்தவரின் மருமகன் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
ஏனைய இருவரையும் எதிர்வரும் 25ஆம் திகதி வரையுமான 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
No comments