Header Ads

கார்பன் வெளியேற்றம் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் சிங்கப்பூர் - இலங்கை கைச்சாத்து


கார்பன் வெளியேற்றம் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைச்சாத்திட்டுள்ளார்.

சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லுங்க் உடனான சந்திப்பின் போதே இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

சிங்கப்பூருக்கான இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று சிங்கப்பூர் பிரதமரை சந்தித்தார்.

இஸ்தானா மாளிகையில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.  

இதன்போது, சிங்கப்பூர் பிரதமரால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு அன்பான வரவேற்பளிக்கப்பட்டது.  

இருநாட்டுத் தலைவர்களுக்கும் இடையிலான சிநேகபூர்வ பேச்சுகளை தொடர்ந்து  இருதரப்பு பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

சிங்கப்பூர் மற்றும் இலங்கைக்கு இடையில் காணப்படும்  ஒத்துழைப்புகளை மேலும் பலப்படுத்திக்கொள்வது தொடர்பில் தலைவர்கள் அவதானம் செலுத்தியுள்ளதுடன்,  பரந்த பொருளாதார ஒருமைப்பாட்டினை ஏற்படுத்திக்கொள்வது தொடர்பிலும் கலந்தாலோசிக்கப்பட்டுள்ளது.

பாரிஸ் ஒப்பந்தத்தின் 6 ஆம் பிரிவிற்கமைய, கார்பன் வெளியேற்றம் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் சிங்கப்பூர் பிரதமர் முன்னிலையில் கைச்சாத்திடப்பட்டது. 

சிங்கப்பூர் வர்த்தக மற்றும் கைத்தொழில் நிரந்தர செயலாளர் பெக் ஸ்வன்  மற்றும் சிங்கப்பூருக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் சசிகலா பிரேமவர்தன ஆகியோர் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளனர்.

பாரிஸ் ஒப்பந்தத்தின் பிரிவு 6 க்கு அமைய, சர்வதேச கார்பன் வணிகத்தின் கீழ் பசுமை வீட்டு வாயு வெளியேற்றத்தை மட்டுப்படுத்தும் நோக்கில், இலாபகரமான முறையில் ஒத்துழைப்புடன் செயற்படுவதற்கான வாய்ப்பு இதன்மூலம் கிடைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.



No comments

Powered by Blogger.