தரமற்ற மருந்துகள் தொடர்பில் விசாரணை: 15 பேர் கொண்ட விசேட குழு நியமனம்
தரமற்ற மருந்துகளின் பயன்பாடு தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக 15 பேர் கொண்ட விசேட குழுவை கணக்காய்வாளர் நாயகம் நியமித்துள்ளார்.
விசாரணைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கணக்காய்வாளர் நாயகம் டபிள்யூ.பி.சி. விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.
சுகாதார அமைச்சு, மருந்துகள் விநியோகப் பிரிவு, அரச மருந்தக கூட்டுத்தாபனம், மருந்து தயாரிப்புக் கூட்டுத்தாபனம், கொழும்பு தேசிய வைத்தியசாலை, நாட்டின் ஏனைய பிரதான வைத்தியசாலைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் மற்றும் வைத்தியர்கள் ஆகியோர் இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
தேசிய மருந்துகள் ஒழுங்குமுறைப்படுத்தும் அதிகார சபை மற்றும் சுகாதார அமைச்சு தொடர்பில் தேசிய கணக்காய்வாளர் அலுவலகம் முன்னெடுத்துள்ள விசாரணைகளில், தரமற்ற மற்றும் பதிவு செய்யப்படாத மருந்துகளின் பாவனை குறித்து பல்வேறு தகவல்கள் வௌிவந்துள்ளமையினால், தற்போது விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பில் நாடாளுமன்ற பொது கணக்குகள் பற்றிய குழுவில் கலந்துரையாடப்பட்டதாக கணக்காய்வாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
மருந்து கொள்வனவு மற்றும் விநியோகம் என்பனவற்றுடன் தொடர்புடைய கணினிக் கட்டமைப்பு குறித்தும் தற்போது விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
இந்த விசாரணைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும் கணக்காய்வாளர் நாயகம் தெரிவித்தார்.
விசாரணை அறிக்கை இன்னும் இரண்டு மாதங்களில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என கணக்காய்வாளர் நாயகம் குறிப்பிட்டார்.
No comments