மதுரை ஆதீனம் அருணகிரி நாதர் உடல்நலக்குறைவு காரணமாக மதுரையில் உள்ள தனியார் மருத்துவனையில் சிகிச்சை பலன் இன்றி காலமானார்.
மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் உடல்நலக் குறைவால் காலமானார்
77 வயதான மதுரை ஆதீனம் அருணகிரி நாதர் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த நான்கு தினங்களுக்கு முன்பு மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு சுவாசக் கோளாறு இருந்ததால் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், அவரது உடல்நிலை தொடர்ந்த பின்னடைவை சந்தித்து வந்தது.
ஆதீனம் அருணகிரிநாதரின் உடல், ஆதீன மடத்திற்கு எடுத்து வரப்பட்டு, இன்று இறுதி சடங்குகள் நடக்க உள்ளன.
அவரது மறைவுக்கு முதல்வர் உட்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மதுரை ஆதீனத்தில் தனக்கு அடுத்த பீடாதிபதியாக நித்யானந்தாவை 2012 ஏப்., 12ல் அருணகிரி நாதர் அறிவித்து முடிசூட்டினார். இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவிக்க, தன் முடிவை ஆதீனம் திரும்ப பெற்றார். ஆனால், 'நான்தான் அடுத்த ஆதீனம்' என நித்யானந்தா வழக்கு தொடர்ந்தார். வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், 2019ல் திருவாவடுதுறை ஆதீனத்தின் மூத்த தம்பிரானான சுந்தரமூர்த்தி தம்பிரானை இளைய ஆதீனமாக, மதுரை ஆதீனம் அறிவித்தார்.நுழையும் நித்தியானந்தா?ஆதீனம் கவலைக்கிடமாக இருந்த நிலையில், 'பேஸ்புக்' வழியாக நித்யானந்தா அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், தன்னை இளைய ஆதீனமாக முடிசூட்டியதை அவர் நினைவு கூர்ந்துள்ளார்.
மேலும், மதுரை ஆதீனத்திற்கான எல்லா பொறுப்புகளும், உரிமைகளும், கடமைகளும், அதிகாரங்களும், சடங்குகளும் செய்வதற்கான பாரம்பரிய உரிமைகள் பெற்று, ஆன்மிக, மத மற்றும் மொழியியல் சிறப்புகளை புனரமைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.இதனால், மீண்டும் மதுரை ஆதீனம் இடத்தை பிடிக்க, நித்யானந்தா திட்டமிட்டுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது. ஆனால், 'நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால், அவரால் மடத்திற்குள் நுழைய முடியாது; ஆதீனமாகவும் முடியாது' என்கின்றனர் ஹிந்து அமைப்பினர்.
இதற்கிடையில், நேற்று காலை ஆதீனத்தை நேரில் உடல்நலம் விசாரித்த தருமபுரம் ஆதீனம், மடத்திற்கு சென்று மதுரை ஆதீனம் பயன்படுத்தும் அறைக்கு, 'சீல்' வைத்தார். இது குறித்து, தருமபுர ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்தர் கூறியதாவது:ஆதீனங்கள் வெளியில் சென்றால் சன்னிதானம் இருக்குமிடம், முக்கிய ஆவணங்கள், பொக்கிஷங்கள் இருக்கும் இடத்தை பூட்டி சீல் வைப்பது மரபு. அவரது அறையில் மற்றவர்கள் நுழையக்கூடாது. பொருட்களை பயன்படுத்தக் கூடாது என்பதற்காக 'சீல்' வைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில், மதுரை இளைய ஆதீனம் மற்றும் வக்கீல், ஊழியர்கள் முன்னிலையில், அவரது அறை பூட்டி சீல் வைக்கப்பட்டது. இவ்வாறு, அவர் கூறினார்
No comments