தோல்வியடைந்தது இணைய வழி கற்கை- ஒப்புக்கொண்டது கல்வியமைச்சு!
தொற்றுநோய் காலத்தில் இலங்கை பாடசாலை மாணவர்களுக்கு இணையவழியில் மேற்கொள்ளப்பட்ட கற்பித்தல் நடவடிக்கை வெற்றியளிக்கவில்லை என்பது ஸ்ரீலங்கா அரசாங்க புள்ளிவிபரங்கள் ஊடாக தெரியவந்துள்ளன.
ஸ்ரீலங்கா கல்வி அமைச்சின் தரவுகளுக்கு அமைய, நாட்டில் 2,000ற்கும் மேற்பட்ட பாடசாலைகளில் இணைய வசதி இல்லையென்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்றுநோயால் வீழ்ச்சியடைந்த பாடசாலை கல்வியைப் மேம்படுத்த, தோல்வியுற்ற இணையவழி கல்வி முறையை கைவிட்டு மாற்று திட்டம் தொடர்பான கல்விச் சீர்திருத்தங்களை கண்டறிவது தொடர்பில் இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவிற்கும், இலங்கை ஆசிரியர் சங்கம் உள்ளிட்ட அதிபர்கள், ஆசிரியர்களின் பங்கேற்புடன் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த கலந்துரையாடல் இந்த வார ஆரம்பத்தில் கல்வி அமைச்சில் நடைபெற்றது. கொரோனா தொற்றுநோயால் கடந்த வருடம் மார்ச் மாதம் 12ஆம் திகதி முதல் இலங்கையில் பாடசாலைகள் மூடப்பட்டு ஒரு வருடமும் மூன்று மாதங்களும் கடந்துள்ள நிலையில், மாற்று கல்வி செயற்பாடுகள் குறித்து அரச அதிகாரிகள், தொழிற்சங்கங்களுடன் கலந்துரையாடியது இதுவே முதல் முறை என இலங்கை ஆசிரியர் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
பெரும்பான்மையான மாணவர்கள் ஒரு வருடத்திற்கும் மேலாக கல்வி வாய்ப்புகளை இழந்துள்ள நிலையில், மாற்று கல்வி செயற்பாடு குறித்து விவாதிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அந்த சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
பாடசாலை கல்வியை தொடர்ந்து முன்கொண்டு செல்வதில் இணையவழி கல்வியின் தோல்வியை தொழிற்சங்கங்கள் சுட்டிக்காட்டியுள்ளதோடு, இதை ஸ்ரீலங்கா கல்வி அமைச்சும் ஏற்றுக்கொண்டதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டார்லின் கூறியுள்ளார்.
கல்வி அமைச்சின் தரவுகளுக்கு அமைய நாட்டில் 2,000ற்கும் மேற்பட்ட பாடசாலைகள் இணைய வசதி இல்லாதவை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையில் கணினி கல்வியறிவு விகிதம் 23% ஆகவும், பெருந்தோட்டப் பகுதிகளில் இது 12% ஆகவும் குறைந்த மட்டத்தில் காணப்படுவதும் கண்டறியப்பட்டுள்ளதாக அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.
வீழ்ச்சியடைந்த பாடசாலை கல்வியை மேம்படுத்துவதற்கான ஒரே வழி, இணையவழி கல்வி முறைமையே என்ற எண்ணத்தில் செயற்பட்டமையால், பலர் கல்வியை இழந்துள்ளதாகவும், 2020 மற்றும் 2021 ஆகிய வருடங்களில் பாடசாலைகள் திறக்கப்பட்ட சந்தர்பத்தில் மாத்திரமே பல மாணவர்கள் கல்வி கற்றதாகவும், தொழிற்சங்கங்கள், இராஜாங்க கல்வி அமைச்சருக்கு சுட்டிக்காட்டியுள்ளன.
இந்த நிலைமைக்கு மாற்றாக, தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தயாரிக்கப்பட்டு, மாணவர்களுக்கு பொருத்தமான கற்றல் தொகுப்பை வழங்குவது குறித்து விவாதங்கள் நடத்தப்பட்டதாக இலங்கை ஆசிரியர் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
கல்வி அமைச்சில் தொழில்நுட்பத்தை ஒரு பாடமாகப் கற்ற அதிகாரிகளைக் கொண்ட கல்வி தொழில்நுட்பப் பிரிவை நிறுவவும், தொலைக் கல்வியை மேற்கொள்ளவும் இராஜாங்க கல்வி அமைச்சர் இணக்கம் தெரிவித்ததாக இலங்கை ஆசிரியர் சங்கம் கூறியுள்ளது.
வீழ்ச்சியடைந்த பாடசாலை கல்வியை மேம்படுத்த, மாணவர்களுக்கு 'ஃபைபர் ஒப்டிக்' தொழில்நுட்பத்தை வழங்குவது குறித்து கல்வி அமைச்சு அவதானம் செலுத்தியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தற்போதைய சூழ்நிலையில் பாடத்திட்டம் பொருத்தமானதாக மாற்றியமைக்கப்பட வேண்டும் எனவும், ஆசிரியர் தொழிற்சங்கங்கள் சுட்டிக்காட்டியுள்ளதோடு, வீழ்ச்சியடைந்த பாடசாலை கல்வியை தொடர்வது தொடர்பாக புதிய அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷
👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க
No comments