நானும் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் அபிமானி! மனம் திறந்த பிரபலம்
தற்போது அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகியிருக்கும் 'தி ஃபேமிலிமேன்' தொடரில் 'செல்லம்' கதாபாத்திரம் ரசிகர்களிடையே பேசு பொருளாக மாறியிருக்கிறது.
சமூக வலைதளங்களில் இந்த கதாபாத்திரம் ட்ரெண்ட் ஆக, அது குறித்து பிபிசி தமிழுக்காக இயக்குநர், நடிகர் என பன்முகம் கொண்டவர் உதய் மகேஷ் வழங்கிய செவ்வியில் இருந்து,
செல்லம் கதாப்பாத்திரத்திற்கு நீங்கள் தேர்வான கதையை சொல்லுங்கள்? "மும்பையில் இருக்கக்கூடிய ஒரு 'காஸ்டிங்' நிறுவனத்தில் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. அவர்கள் 'தி ஃபேமிலிமேன்' சீரிஸ் நடிகர்கள் தேர்வுக்காக சென்னை வந்திருந்தார்கள். அப்போது முதலில் 'செல்லம் சார்' கதாபாத்திரம் தவிர்த்து வேறு இரண்டு கதாபாத்திரங்களுக்கான தேர்வு நடந்தது. அழகம்பெருமாளின் கதாபாத்திரம் மற்றும் ஜெபராஜின் கதாபாத்திரம்தான் அவை. பிறகு இரண்டு மாதங்களுக்கு பிறகு 'செல்லம்' கதாபாத்திரத்திற்கு அழைத்தார்கள்".
'தி ஃபேமிலி மேன்' சீசன்1 பார்த்தீர்களா? இரண்டாவது சீசனின் செல்லம் கதாபாத்திரத்திற்காக உங்களை அணுகியபோது என்ன நினைத்தீர்கள்?
"எனக்கு சீசன் 1 மிகவும் பிடித்திருந்தது. இரண்டாவது சீசனில் நானும் இருப்பேன் என அப்போது எதிர்பார்க்கவில்லை. கதாபாத்திரத்திற்காக அணுகியபோது நடிகனாக என்னுடைய பணியை செய்தேன். மற்றபடி, எனக்கு பிடித்த இணையதொடரில் மனோஜ் பாஜ்பயி உள்ளிட்ட நடிகர்களோடு நடித்ததில் மகிழ்ச்சி"
கே: இப்போது இணையதளத்தில் 'செல்லம்' கதாபாத்திரத்தை வைத்து நிறைய மீம்ஸ் வந்து கொண்டிருக்கிறதே, கவனித்தீர்களா? "சமூக வலைதளங்களில் வந்த மீம்ஸ் எல்லாம் பார்த்தேன். இதை நான் எதிர்ப்பார்க்கவில்லை. ஏனெனில் இதில் என்னுடையது சிறிய கதாப்பாத்திரம்தான். அதுமட்டுமில்லாமல், மனோஜ் பாஜ்பயி, சமந்தா, ப்ரியாமணி உள்ளிட்ட பலரும் இதில் உள்ளனர். அவர்களது கதாபாத்திரங்களை தாண்டி என்னுடையது கவனிக்கப்பட்டது மகிழ்ச்சியான ஒன்று.
ரசிகர்களுக்கும், 'செல்லம்' கதாபாத்திரத்தை வடிவமைத்த இந்த தொடரின் இயக்குநர்கள் ராஜ், டிகே இவர்களுக்கு நன்றி. படப்பிடிப்பின் போதே, இந்த கதாபாத்திரத்தை வைத்து கலகலப்பாக சென்றது. எங்களுக்கு பிடித்தது போலவே ரசிகர்களுக்கும் பிடித்திருக்கிறது. சமூக வலைதளங்களில் இதற்கான மீம்ஸ் பார்த்தபோது பாசிட்டிவ் ஆகவே பார்த்தேன். நிறைய மீம்ஸ்கள் ரசிக்கும்படியாகவே இருந்தன. அதில் கூகுள் என்பதற்கு பதிலாக 'செல்லம்' என்று போட்டதை மிகவும் ரசித்தேன்".
கே: செல்லம் கதாபாத்திரத்திற்கு இது போன்ற ரெஸ்பான்ஸ் இருக்கும் என எதிர்ப்பார்த்தீர்களா?
நிச்சயமாக இல்லை. சமூக வலைதளங்களில் இந்த கதாப்பாத்திரம் ட்ரெண்ட் ஆன போது என்னுடைய நண்பர் ஒருவர்தான் இதை தெரியப்படுத்தினார். நண்பர்கள், குடும்பம் என அனைவருக்கும் இதில் ஆச்சரியம்தான். செல்லம் கதாப்பாத்திரம் போன்று நண்பர்களுக்கு உதவி செய்வது, உளவு வேலை பார்ப்பது என என்னுடைய இளமை காலத்தில் இருந்திருக்கிறேன். நண்பர்களும் அதை சொல்லி மகிழ்ந்தார்கள். இதுமட்டுமில்லாமல், செல்லம் கதாப்பாத்திரத்திற்கு என தனியாக சீரிஸ் வேண்டும் என்றெல்லாம் ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.இதுகுறித்து எதுவும் வாய்ப்பு வந்தால் மகிழ்ச்சிதான். அதேபோல, 'மணி ஹெய்ஸ்ட்' தொடரின் 'புரொஃபசர்' கதாப்பாத்திரத்துடன் 'செல்லம்' கதாப்பாத்திரத்தை ஒப்பிடுவதும் பார்க்க முடிகிறது. உங்களை போலவே நானும் 'மணி ஹெய்ஸ்ட்' தொடரின் ரசிகன்தான். அதனுடன் ஒப்பிடும் அளவுக்கு 'செல்லம்' கதாபாத்திரம் பெரியதா என தெரியவில்லை. ஆனால், இதுவும் மகிழ்ச்சிதான்"
கே: 'தி ஃபேமிலிமேன்' தொடருக்கு ஆதரவு, எதிர்ப்பு என கலவையான விமர்சனங்களை பார்க்க முடிகிறதே?
"தமிழுணர்வு இங்கு எல்லாருக்குமே உண்டு. இந்த கதை சரியானதா தவறானதா என முடிவெடுக்கும் இடத்தில் நான் இல்லை. ஏனெனில், இதில் நடிக்கும் போது எனக்கு இதன் முழு கதையும் தெரியாது. என்னுடைய கதாபாத்திரம் மட்டும்தான் தெரியும். இது பார்த்தவர்களை புண்படுத்தியிருந்தால் அது தொடர்பாக அவர்களுடைய கருத்தை பதிவிட்டு வருகிறார்கள். மற்றபடி இதில் என்னுடைய தனிப்பட்ட கருத்தை சொல்ல முடியாது. நானும் ஈழத்தலைவர் பிரபாகரனின் அபிமானி. தமிழ் ஈழம் குறித்தான நிறைய விஷயங்களுக்கு ஆதரவாக இருந்திருக்கிறேன். அதனால், இதை கதையாக பார்த்துவிட்டு செல்வதுதான் பரவாயில்லை. அதையும் தாண்டி, இது தமிழ் உணர்வுகளை பாதித்திருக்கிறது என்றால் அதுவும் தவறுதான்".
கே: இந்த கதை புனைவுதான் என்றாலும், 'இதுதான் உண்மை' என பார்ப்பவர்கள் நம்பிவிடக்கூடிய அபாயமும் உண்டு என்கிற கருத்தையும் பார்க்க முடிகிறதே?
"சினிமாவில் சொல்லக்கூடிய விஷயங்களுக்கு நீங்கள் சொல்வது போன்ற அபாயம் உண்டுதான். அதிலும் இதுபோன்ற விஷயங்களை நாம் கவனமாக கையாள வேண்டும். இதில் தவறாக காட்டப்பட்டிருந்தால் அது வருத்தம்தான். படைப்பாளிகள் வரலாறை காட்சிப்படுத்தும்போது உண்மை என்ன என்று தெரிந்து கொள்ள வேண்டும் அந்த வகையில், இன்னும் சரியான தகவல்களை இதில் கொடுத்திருக்கலாமோ என்று தான் எனக்கும் தோன்றியது. ஏனெனில், ஈழம் என்பது தமிழர்களின் உணர்வுபூர்வமான விஷயம்" எனவும் கூறினார்.
🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷
👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க
✌👇👇👇👇👇👇👇👇
No comments