கொரோனா தொற்று மோசம் -14 நாட்கள் நாட்டை முடக்குங்கள் -நான்கு மருத்துவ சங்கங்கள் இணைந்து கூட்டாக கோரிக்கை
கிராம உத்தியோகத்தர் பிரிவுளை முடக்குவதும் , மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து கட்டுப்பாடுகளை விதிப்பதும் கொவிட் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு உதவும் என்று நாம் எதிர்பார்க்கவில்லை. எனவே எதிர்வரும் 14 நாட்களுக்கு தளர்வற்ற தொடர்ச்சியான ஊரடங்கினை அல்லது நாடளாவிய ரீதியிலான போக்குவரத்து கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்று இலங்கை மருத்துவ சங்கம், அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம், விசேட வைத்திய நிபுணர்கள் சங்கம் மற்றும் மருத்துவ ஆய்வுகூட சேவை தொழில்வல்லுனர்கள் சங்கம் என்பன இணைந்து அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளன.
இலங்கை மருத்துவ சங்கத்தின் கேட்போர் கூடத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு 4 மருத்துவ சங்கங்களும் இணைந்து அரசாங்கத்தை கோருவதாக இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் பத்மா குணரத்ன தெரிவித்தார்.
கொரோனா தொற்று பரவலில் நாடு மிகவும் முக்கியமான கட்டத்தில் இருப்பதால், இந்த நடவடிக்கையை மேற்கொள்வது கட்டாயமானது என சங்கத்தின் தலைவர் வைத்தியர் பத்மா குணரத்ன தெரிவித்துள்ளார். கிராம சேவையாளர்கள் பிரிவுகளை மாத்திரம் தனிமைப்படுத்துவதால் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வசதிக் குறைபாடுகள் காரணமாக கொரோனா தொற்றை கண்டறிவதற்கான பீ.சி.ஆர் பரிசோதனை முடிவுகளை பெற்றுக்கொள்வதில் காலதாமதம் ஏற்படுவதாக பத்மா குணரத்ன குறிப்பிட்டுள்ளார். அத்துடன் கொரோனா தொற்று நோயாளர்களை கண்டறியும் வகையில் கிராம சேவையாளர் பிரிவுகளும் ஏழு நாட்களுக்கு மாத்திரமே தனிமைப்படுத்தப்படுவதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
கொரோனா தொற்றுப் பரவலை கட்டுப்படுத்துவதற்கு மூன்று நாட்கள் மாத்திரம் ஊரடங்கு உத்தரவை அமுல்படுத்துவது செயற்றிறன் அற்றது எனவும் மூன்று நாட்களில் வைரஸ் தொற்று நோய் அறிகுறிகள் தென்படாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மூன்று நாட்களின் பின்னர் பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் போது மீண்டும் மக்கள் ஒன்றுகூடுவதால், வைரஸ் தொற்று தொடர்ந்தும் பரவும் எனவும் அவ்வாறான கட்டுப்பாடுகளை அமுல்படுத்துவதால் எந்தவொரு பயனும் இல்லை எனவும் வைத்தியர் பத்மா குணரத்ன மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அனைத்து அரசாங்க வைத்தியசாலைகளும் கொரோனா தொற்று நோயாளர்களால் முழுமையாக நிரம்பியுள்ளதால், ஏனைய நோய்களுக்கு உள்ளாகும் நோயாளர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். ஏனைய நோயாளர்களுக்கென ஒதுக்கப்பட்ட படுக்கை வசதிகளில் தற்போது கொரோனா தொற்று நோயாளர்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்படுவதாகவும் பத்மா குணரத்ன மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொரோனா தொற்று நோயாளர்களுக்கு அதிகளவான ஒக்சிஜன் தேவைப்படுவதுடன், பெரும்பான்மையான தீவிர சிகிச்சை பிரிவின் படுக்கை வசதிகளிலும் அவர்களே அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதனால் ஏனைய சுகவீனங்களுக்கு உள்ளாகி, வைத்தியசாலைகளின் தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் அனுமதிக்கப்படும் நோயாளர்களுக்கு உரிய சிகிச்சைகளை வழங்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் வைத்தியர் பத்மா குணரத்தன சுட்டிக்காட்டியுள்ளார்.
🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷
👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க
✌👇👇👇👇👇👇👇👇
No comments