Header Ads

வவுனியா வைத்திய சாலையை போதனா வைத்தியசாலையாக தர முயர்த்துமாறு கோரிக்கை!


வவுனியா மாகாண பொது வைத்தியசாலையினை போதனா வைத்தியசாலையாக தரமுயர்த்த வேண்டும் என யாழ்.போதனா பிரதி பணிப்பாளர்  மருத்துவர் சி. எஸ். யமுனாநந்தா கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘கொரோனா தொற்று சமூக இயங்கு தளத்தில் பாரிய முடக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது. இதில் சிறுபிள்ளைகளின் கல்வி முதல் பல்கலைக்கழக கல்வி வரை அடங்கும். இலங்கையின் வடபகுதியில் மருத்துவக் கல்வி தொடர்பாக நோக்குகையில்,

யாழ் மருத்துவபீட மாணவர்களின் கல்வி தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டாலே எதிர்வரும் 5 வருடங்களுக்கு எமது பிரதேசத்திற்கு சேவையாற்ற போதிய அளவு மருத்துவர்கள் உருவாக்கப்படுவார்கள்.

எனவே கொரோனா தொற்று காரணமாக இடைநிறுத்தப்பட்ட மருத்துவப் போதனாக் கற்கைகளின் சிலபகுதிகளை யாழ் மருத்துவ பீடத்தின் மூன்றாம் நான்காம் ஆண்டு மாணவர்கள் வவுனியா வைத்தியசாலையில் மேற்கொள்ளலாம்.

மேலும் பல்கலைக்கழகமாக தரமுயர்த்தப்படும் வவுனியா வளாகத்தில் மருத்துவபீடத்தினை உருவாக்குவதனால் முல்லைத்தீவு,வவுனியா, மன்னார் மாவட்டங்களில் மருத்துவபீடத்திற்கு தெரிவு செய்யும் மாணவர்களை அதிகரிக்கலாம்.

கொரோனாத் தொற்றுகாரணமாக உலகளாவிய ரீதியில் அடுத்து வரும் 5 வருடங்களிற்கு மருத்துவ சேவையில் ஆளணியில் நெருக்கடி ஏற்படும். இதனால் மருத்துவர்கள், மருத்துவ நிபுணர்கள் மற்றும் துணை மருத்துவப் பிரிவுகளிற்கு சர்வதேச ரீதியில் தேவை அதிகரிக்கும்.

இந் நிலையில் உள்ளூரில் மருத்துவ சேவை வழங்கலில் நெருக்கடி ஏற்படலாம். எனவே எம்மிடம் உள்ள தற்போதைய வளங்களைக் கொண்டு வடபகுதியில் யாழ் போதனா வைத்தியசாலைக்கு அடுத்து ஆளணி வசதி உடைய வவுனியா மாகாண வைத்தியசாலையினை போதனா வைத்தியசாலையாகத் தரமுயர்த்தி அங்கு பல மருத்துவ நிபுணர்களை மேலும் நியமித்து மருத்துவக் கல்வியினை விஸ்தரிக்கவேண்டிய தேவைதற்போது ஏற்பட்டுள்ளது.“ என தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.