Header Ads

குருந்தூர் மலையில் இந்துக்களின் வழிபாட்டுரிமையை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை!


முல்லைத்தீவு மாவட்டம் தண்ணிமுறிப்புப் பகுதியில் உள்ள குருந்தூர் மலையில் தமிழர்களின் வழிபாட்டு அடையாளங்களை முழுமையாக மீட்டெடுப்பதற்கான நடவடிக்கையை எடுக்கவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த வழக்குத் தொடர்பாக, வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன், கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் சின்னராசா லோகேஸ்வரன் ஆகியோர் சுமந்திரனை மீண்டும் சந்தித்து முக்கிய ஆவணங்கள் சிலவற்றினை இன்று (வெள்ளிக்கிழமை) கையளித்திருந்தனர்.

இந்தச் சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

மேலும், குருந்தூர் மலை குறித்து சில வருடங்களுக்கு முன்னரே பிணக்கு ஏற்பட்டது என்று குறிப்பிட்டுள்ள அவர், இது தொடர்பாக முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல்செய்யப்பட்டு அதில் இணக்கப்பாடும் எட்டப்பட்டிருந்ததாகத் தெரிவித்தார்.

எனினும், கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் அமைச்சர் சகிதம் குருந்தூர் மலைக்குச் சென்றிருந்த நிலையில், தமிழர் வழிபாட்டுச் சின்னத்தை அகற்றியதுடன் புத்தர் சிலையொன்றைப் புதிதாக அங்கு வைத்து தொல்பொருள் ஆராய்ச்சியையும் ஆரம்பித்துள்ளார்கள்.

எனவே, இதுகுறித்து நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்வதற்காக கடந்த 2018ஆம் ஆண்டில் தாக்கல் செய்யப்பட்டிருந்த AR/673/18 என்ற வழக்கின் ஆவணப் பிரதியை ரவிகரன் தன்னிடம் கையளித்துள்ளதாக சுமந்திரன் தெரிவித்தார்.

அந்தவகையில், குருந்தூர் மலையில் இந்து மக்கள் சென்று வழிபடுவதற்கான முழு உரிமையையும் பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, குருந்தூர் மலை தொடர்பாக வழக்குத் தாக்கல் செய்வதற்காக ஏற்கனவே, துரைராசா ரவிகரன் மற்றும் லோகேஸ்வரன் ஆகியோர் கடந்த ஜனவரி 30ஆம் திகதி சுமந்திரனிடம் ஆவணங்கள் சிலவற்றைக் கையளித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.