வீட்டுத் திட்டங்களை பூரணப்படுத்தித் தருமாறு கோரி மன்னாரில் மக்கள் போராட்டம்!
மன்னார் மாவட்டத்தில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் வழங்கப்பட்டுள்ள வீட்டுத் திட்டங்களை பூரணப்படுத்தித் தருமாறு கோரி பாதிக்கப்பட்ட மக்களால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்தப் போராட்டம் மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக இன்று (வெள்ளிக்கிழமை) காலை முன்னெடுக்கப்பட்டதுடன், அரசாங்க அதிபருக்கு மகஜரும் கையளிப்பட்டுள்ளது.
மன்னார் தேசிய மீனவ ஒத்துழைப்புப் பேரவையின் அனுசரணையில் நேசக்கரம் பிரஜைகள் குழு ஏற்பாடு செய்திருந்த இந்தப் போராட்டத்தில் ஒன்றுகூடிய மக்கள் பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நல்லாட்சி அரசாங்கத்தினால் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் ஊடாக வழங்கப்பட்ட வீட்டுத் திட்டங்கள் இன்றுவரை பூரணப்படுத்தப்படவில்லை. இதனால், பயனாளிகள் வீடு அற்றவர்களாகவும், இருந்த குடிசை வீட்டையும் அகற்றியுள்ள நிலையில் பெரும் சிரமத்திற்கு மத்தியில் இருப்பதாகவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இந்த வீட்டுத் திட்டத்தை விரைவாகப் பூரணப்படுத்தித் தருமாறு போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேவேளை, போராட்டத்தில் ஈடுபட்ட மக்களால் மாவட்ட அரசாங்க அதிபரிடம் மகஜர் கையளிப்பதற்கு எதிர்பார்த்திருந்தபோதும், அவர் வேறு கூட்டமொன்றுக்குச் சென்றிருந்த நிலையில், மாவட்ட மேலதிக செயலாளரிடம் ஜனாதிபதி மற்றும் அரசாங்க அதிபருக்கான மகஜரை மக்கள் கையளித்துள்ளனர்.
No comments