Header Ads

கிளிநொச்சி நகரில் இராணுவம் சுவீகரித்துள்ள காணிகளை விடுக்குமாறு ஸ்ரீதரன் வலியுறுத்து!



கிளிநொச்சி நகரில் இராணுவம் சுவீகரித்துள்ள காணிகளை விடுத்தல் உள்ளிட்ட தமிழ் மக்களின் சில பிரச்சினைகளுக்குத் தீர்வை முன்வைக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் வலியுறுத்தியுள்ளார்.

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) மாவட்டச் செயலகத்தில் ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திலேயே ஸ்ரீதரனால் இவ்வாறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இதன்படி,

கிளிநொச்சி மகாவித்தியாலயத்தின் காணிகளை இராணுவம் சுவீகரத்து வைத்திருக்கிறது அதை விடுவிக்க தொடர் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.

கிளிநொச்சி பொது நூலகத்திற்கான காணியையும் இராணுவம் சுவீகரத்து வைத்திருக்கிறது அதை விடுவிக்க தொடர் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.

அக்கராயன் கரும்புத் தோட்டத்தின் காணியை தனிநபர்களுக்கு வழங்க முடியாது எனவும் அது கூட்டுறவுச் சங்கத்திற்கே வழங்கப்பட வேண்டும்.

விவசாயிகள் பாதிக்கப்படாத வகையில் நெல் கொள்வனவு செய்யப்பட வேண்டும். காரணம் கிளிநொச்சி மாவட்ட விவசாயிகள் இம்முறை அதிக விளைச்சலை பெறமுடியாமல் போயுள்ளது. இவற்றை கருத்தில் கொண்டே நெல் கொள்வனவு செய்யப்பட வேண்டும்.

சட்ட விரோதமான மண் அகழ்வினை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

ஐ ரோட் திட்டத்தை மிக வேகமாக துரிதப்படுத்த வேண்டும். பல்லவராயன் கட்டு வன்னேரி வலைப்பாடு வேரவில் கிராஞ்சி ஆகிய பகுதிகளில் இருந்து மக்கள் கிளிநொச்சி நகருக்கு வருவதில் பாரிய இடையூறுகளை எதிர்கொள்கின்றனர். கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவு மற்றும் பச்சிலைப்பள்ளி ஆகிய பிரதேசங்களில் இந்த திட்ட வீதிகள் இன்னும் ஆரம்பமாகவில்லை.

காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவின் கிளிநொச்சி, மன்னார், வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களின் அலுவலகம் அநுராதபுரத்திற்கு மாற்ற அனுமதிக்க முடியாது. மீள அதை யாழ்ப்பாணத்திற்குக் கொண்டுவர வேண்டும். அல்லாது இந்த நான்கு மாவட்டங்களுக்கும் பொதுவாக மாங்குளத்தில் அதன் அலுவலகம் திறக்கப்பட வேண்டும். அநுராதபுரத்திற்கு மாற்றுவதன் நோக்கம் வேறு சில நோக்கங்களை அடைவதற்காக மாத்திரமே.

கிளிநொச்சி மாவட்டத்தின் கல்வி நிலையை மேம்படுத்த ஆசிரியர் வெற்றிடங்கள் நிரப்பப்பட வேண்டும். குறிப்பாக புதிதாக கிளிநொச்சி மாவட்டத்தில் கல்வியற் கல்லூரியில் இருந்தும் பல்கலைக்கழகத்தில் இருந்தும் புதிதாக ஆசிரியராக நியமனம் பெறுபவர்கள் எமது மாவட்டத்திற்கே ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும். என்ற கோரிக்கைகளை அவர் முன்வைத்துள்ளார்.

No comments

Powered by Blogger.