கொவிட் தொற்றால் உயிரிழந்தவர்களின் சடலங்களை அடக்கம் செய்வது குறித்து வெளியாகிய தகவல்!
கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் சடலங்களை அடக்கம் செய்யும்போது பின்பற்ற வேண்டிய சிறப்பு வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளன. தொற்றுக்குள்ளான நிலையில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் அடக்கம் செய்யப்படும்போது பின்பற்றப்படவேண்டிய காரணிகள் குறித்து சுகாதார அமைச்சு இதன்போது தெளிவுபடுத்தியுள்ளது.
கொரோனா தொற்று காரணமாக உயிரிழப்பவர்களின் சடலங்கள் தொடர்பான பிரேத பரிசோதனையை முன்னெடுத்தல் மற்றும் கொரோனா சடலங்களை அகற்றுதல் ஆகியன குறித்த வழிகாட்டலில் வெளியிடப்பட்டுள்ளன. மேலும், குறித்த சடலத்தை அடக்கம் செய்யும் இடம் வரை கொண்டு செல்வது குறித்தும், அதனை அடக்கம் செய்வது தொடர்பிலும், சுகாதார அமைச்சினால் மற்றுமொரு வழிகாட்டல் வழங்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் உயிரிழந்தவர்களின் சடலங்களை விடுவிக்க அனுமதி கிடைத்த 24 மணி நேரத்துக்குள் அதனை எரிக்க அல்லது புதைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், குறித்த சடலம் உறவினர்களிடம் வழங்கப்படக்கூடாது எனவும், சடலங்களை வைப்பதற்கான பெட்டி உறவினர்களால் வழங்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், கொரோனா தொற்றுக்குள்ளான நபர் உயிரிழக்கும் வைத்தியசாலை அல்லது சிகிச்சை மத்திய நிலையத்தினால் வழங்கப்படும் வசதிகளுக்கு அமைய, இறுதிச் சடங்குகளில் இரண்டு மத குருமார் கலந்து கொள்ள முடியும் எனவும், அதிகபட்சமாக ஐந்து உறவினர்கள் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இறுதிச் சடங்குகளின் போது மத நிகழ்வுகள் 10 நிமிடங்களுக்கு மட்டுப்படுத்தப்பட வேண்டும் எனவும், குறித்த சுகாதார வழிகாட்டல்களில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குறித்த சடலத்தை சுகாதார மேற்பார்வையாளர் மற்றும் பொலிஸ் ஆகியோரின் பாதுகாப்புடன், அதனை எரிக்கும் அல்லது புதைக்கும் இடத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் உயிரிழந்தவர்களின் சடலம் எரிக்கப்படும் பட்சத்தில், உறவினரின் வேண்டுகோளுக்கு அமைய, உயிரிழந்தவரின் சாம்பலை பெற்றுக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், ஒன்றரை மீற்றர் முதல் மூன்று மீற்றருக்கு இடைப்பட்ட ஆழத்தில் குறித்த சடலங்கள் அடக்கம் செய்யப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் உயிரிழந்தவர்களின் சடலங்களை புதைப்பதற்கு உறவினர்கள் விரும்பும் பட்சத்தில், உரிய வைத்தியசாலை அல்லது சிகிச்சை மத்திய நிலையத்துக்கு அறிவிக்கப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கான உரிய எழுத்துமூல அனுமதி கிடைக்கப்பெற்ற பின்னர் மாத்திரமே, சடலத்தை அடக்கம் செய்ய நடவடிக்கை எடுக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, இரணைதீவு வரை, தினமும் காலை 5.30 இற்கு கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் உயிரிழந்தவர்களின் சடலங்களை கொண்டு செல்லும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்போது, இரண்டு உறவினர்களுக்கு அனுமதி வழங்கப்படுவதுடன், அவர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகவில்லை என உறுதிப்படுத்தப்படுவது அவசியம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments