Header Ads

கொரோனா வைரஸின் பிறப்பிடம் குறித்து அமெரிக்காவில் ஆய்வு செய்யுங்கள்: சீனா வலியுறுத்தல்!

 


கொடிய கொரோனா வைரஸின் (கொவிட்-19) பிறப்பிடம் குறித்து அமெரிக்காவில் ஆய்வு செய்யுமாறு, உலக சுகாதார அமைப்பிடம் சீனா வேண்டுகோள் விடுத்துள்ளது.

கொரோனா வைரஸ் முதல் முதலில் பரவிய வுகான் நகரில் உலக சுகாதார அமைப்பின் நிபுணர்கள் குழு மேற்கொண்ட ஆய்வில், வுகான் வைராலஜி அறிவியல் மையத்தில் இருந்து மனித இனத்திற்கு வைரஸானது அறிமுகப்படுத்தப்பட்டது என்பது சாத்தியமில்லை என தெரிவித்தது.

எனினும், உலக சுகாதார அமைப்பின் சமீபத்திய புலனாய்வில் சீன அரசாங்கத்தின் தலையீட்டிற்கான சாத்தியம் உள்ளது என அமெரிக்கா குற்றஞ்சாட்டியது.

இந்நிலையில், சீனாவின் வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பு அதிகாரி வாங் வென்பின், ‘வைரஸ் தொற்று குறித்து அமெரிக்காவில் ஆய்வு செய்யுமாறு’ கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘சீனாவை எடுத்துக்காட்டாக கொண்டு, கொரோனா வைரஸின் பிறப்பிடம் பற்றி கண்டறியும் விவகாரத்தில் அமெரிக்காவும் நல்ல விதத்தில், அறிவியல் அடிப்படையில் மற்றும் ஒத்துழைக்கும் வகையில் நடந்து கொள்ளும் என நாங்கள் நம்புகிறோம்.

கொரோனா வைரஸின் பிறப்பிடம் பற்றி ஆய்வு மேற்கொள்ள உலக சுகாதார அமைப்பின் நிபுணர்களை வரவேற்கும்’ என கூறினார்.

இதேபோன்று, சீனாவின் நோய் கட்டுப்பாட்டு மையத்தின் தலைமை தொற்றியலாளர் ஜெங் குவாங் கூறுகையில், ‘கொரோனாவின் பிறப்பிடம் பற்றி கண்டறியும் சர்வதேச முயற்சிகளின் கவனம் தற்பொழுது அமெரிக்காவின் மீது உள்ளது’ என கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.