Header Ads

சீனாவின் செயற்பாடுகள் குறித்து இந்தியா அச்சமடைய தேவையில்லை- சரத் வீரகேசர



இலங்கையில் சீனா இராணுவக் குவிப்பை செய்யவில்லை. ஆகவே தேசிய பாதுகாப்பை முன்னிலைப்படுத்தி இந்தியா அச்சமடையத் தேவையில்லை என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரகேசர தெரிவித்துள்ளார்.

தமிழ் நாளிதழொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த நேர்காணலில் சரத் வீரகேசர மேலும் கூறியுள்ளதாவது, “எந்த நாட்டினதும் நேரடி அரசியல் தலையீடுகள் எமக்கில்லை.

சீனாவுடன் நாம் நல்லதொரு நட்புறவில் உள்ளோம் என்பதற்காக இந்தியாவுடன் நட்புறவை நாம் முறித்துக்கொள்ளவில்லை. அவர்களுடனும் வர்த்தக, கலாசார ரீதியிலான உறவு கையாளப்படுகின்றது.

ஆனால் இந்தியா இலங்கையின் உள்ளக விவகாரங்களில் தலையிட முயற்சிகள் எடுத்தால் அதுவே உறவை முறிக்கவும் காரணமாக அமைந்துவிடும்.

அத்துடன் இலங்கை – இந்திய உறவு 13 ஆம் திருத்தத்தில் தங்கியிருக்கவில்லை என்பதை நினைவில் வைத்துக்கொள வேண்டும்.

இதேவேளை வெறுமனே தேசிய பாதுகாப்பை கருத்தில் கொண்டு நாட்டின் அபிவிருத்தியை கைவிட முடியாது. நாட்டிற்கு அபிவிருத்தி அவசியமானது.

பொருளாதார ரீதியில் வளர்ச்சியடைய வேண்டும் என்றால் இவ்வாறான தீர்மானங்களை நாம் முன்னெடுத்தாக வேண்டும்.

இலங்கையில் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை மட்டுமே சீனா முன்னெடுக்கின்றது. மாறாக அவர்களின் இராணுவம் இங்கு குவிக்கப்படவில்லை.

இலங்கையின் கடல் எல்லை பாதுகாப்பு எப்போதுமே இலங்கை வசமே இருக்கும். ஹம்பாந்தோட்டையாக இருந்தாலும் யாழ்ப்பாணமாக இருந்தாலும் கடல் எல்லையை இலங்கை கடற்படையே பாதுகாக்கும்.

இவ்விடயத்தில் இந்தியா அச்சமடைய வேண்டிய எந்தவித அவசியமும் இல்லை. சீனாவினால் இலங்கையின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சறுத்தல் எதுவும் இல்லை” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.