பிரான்ஸில் விளையாட்டு வீரர்களுக்காக தனியான மாஸ்க் அறிமுகம்!
பிரான்ஸில் விளையாட்டுப் பயிற்சிகளில் ஈடுபடுவோர் அணிந்து கொள்வதற்கு வசதியாகப் புதிய மாஸ்க் வகைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
உள்ளகப் பயிற்சிகளில் ஈடுபடுகின்ற விளையாட்டு வீரர்களுக்கு என்று விசேடமாக வடிவமைக்கப்பட்டுள்ள மாஸ்க்கை விளையாட்டு அமைச்சர் Roxana Maracineanu கடந்த சனியன்று வீரர்கள் முன்னிலையில் அறிமுகப் படுத்தினார்.
பிரான்ஸின் விளையாட்டு உபகரணங் களின் தரநிலையை உறுதிப்படுத்து கின்ற நிறுவனம் புதிய மாஸ்க்குக்கு அதன் அங்கீகாரத்தை வழங்கி உள்ளது.
காற்றை வடிகட்டும் தன்மை கூடியதும் அதே நேரம் சீரான சுவாசத்துக்கு ஏற்ற வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ள புதிய மாஸ்க் இன்னும் சில தினங்களில் விற்பனைக்கு வரவிருக்கின்றது.
கடுமையான பயிற்சிகளின் போது தலையை விட்டு விலகாது இருத்தல், காற்றை வடிகட்டும் திறன், சுவாசத்தின் போது உள்ளெடுக்கின்ற காற்றில் காபனின் அளவைக் கட்டுப்படுத்தும் தன்மை போன்ற பரிசோதனைகளுக்குப் பின்னரே புதிய மாஸ்க் பாவனைக்கு அனுமதிக்கப்படுகிறது என்று விளக்கமளிக்கப்பட்டது.
பிரான்ஸில் விளையாட்டு உபகரணங் களைத் தயாரிக்கின்ற சலோமொன் நிறுவனம் (Salomon company) விளையாட்டு வீரர்களுக்கான புதிய மாஸ்க்கை முதலில் சந்தைப்படுத்த உள்ளது. கழுவி இருபது தடவைகள் திரும்பப் பயன்படுத்தக் கூடிய மாஸ்க் ஒன்று 18 ஈரோக்களுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது.
சலோமொன் நிறுவனத்தை தொடர்ந்து டெக்கத்லோன் (Decathlon) விளையாட்டுப் பொருள் தயாரிப்பு நிறுவனமும் புதிய மாஸ்க்கை தயாரித்து வெளியிடவுள்ளது.
பிரான்ஸில் வைரஸ் தொற்றுக் காரணமாக உள்ளக விளையாட்டுப் பயிற்சி மையங்கள் மூடப்பட்டிருப்பது தெரிந்ததே.
No comments