Header Ads

10 மில்லியன் பார்வைகள் பெற்று யூரியூப் வைரஸ் வீடியோ சாதனை எலிஸே செல்லும் இரட்டையர்கள்!



பிரான்ஸின் பிரபல யூரியூப் இரட்டை யர்கள் மக்பிளை-கார்லிற்றோ (McFly and Carlito) இருவரும் கடந்த ஞாயிறன்று வெளியிட்ட கொரோனா விழிப்புணர்வுப் பாடல் மூன்றே நாட்களில் பத்து மில்லியன் என்ற பார்வைகளைக்(views) கடந்து சாதனை படைத்துள்ளது.
இரண்டு 'யூரியூப்' பிரபலங்களிடமும் கொரோனா வைரஸைத் தோற்கடிப் பதற்காக பொதுமக்கள் நாளாந்தம் கடைப்பிடிக்க வேண்டிய சுகாதாரப் பழக்க வழக்கங்களை முதன்மைப்படுத்தி இணையக் காணொலி ஒன்றைத் தயாரித்து வெளியிடுமாறு அதிபர் மக்ரோன் கேட்டிருந்தார். அந்தக் காணொலியை பத்து மில்லியன் பேர் பார்வையிட்டால் எலிஸே மாளிகைக்குள் தங்களது அடுத்த காணொலியைப் பதிவு செய்வதற்கு அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்றும் அரசுத் தலைமை அறிவித்திருந்தது.
இரட்டையர்கள் இருவரும் அதிபரின் சவாலை உடனடியாகவே ஏற்றுக் கொண்டு தங்கள் பாடல் காணொலி ஒன்றை கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டிருந்தனர். முற்பகல் பத்து மணிக்கு வெளியாகிய காணொலியை 24 மணித்தியாலங்களில் ஐந்து மில்லியன் பேர் பார்வையிட்டனர். நேற்றிரவு பார்வையாளர்களது எண்ணிக்கை பத்து மில்லியனைக் (10 million views) கடந்தது.
அதிபரின் சவாலை ஏற்று அவருடனான பந்தயத்தில் வென்றதன் மூலம் இரட்டையர்கள் இருவரும் எலிஸே மாளிகைக்குள் வரவேற்கப்படவுள்ளனர். அங்கே அதிபர் மக்ரோனுக்கு மற்றொரு பந்தயம் காத்திருக்கிறது. இரட்டையர்கள் இருவரும் தங்களது யூரியூப் சனலில் அதிபர் மக்ரோன் பங்குபற்றும் காணொலி ஒன்றைத் தயாரித்து வெளியிட அனுமதி கோரவுள்ளனர். நாட்டின் அதிபருக்கு இளையோர் மத்தியில் உள்ள செல்வாக்கை அந்தக் காணொலி அதன் பார்வை எண்ணிக் கைகள் ஊடாக உறுதிப்படுத்தும் என்பதால் அது ஒரு முக்கிய சவாலாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
அடுத்த ஆண்டில் தேர்தலை எதிர்கொள் கின்ற மக்ரோன் இளவயதினரிடையே தனக்கிருக்கும் செல்வாக்கை நிலை நிறுத்தும் நோக்குடனேயே இத்தகைய பந்தயங்களில் இறங்கியுள்ளார் என்று அவரை விமர்சிப்போர் கூறுகின்றனர்.
ஆனால் வைரஸ் விழிப்புணர்வுக் காணொலியின் இந்த அமோக வெற்றிச் சாதனை இன்னும் ஐம்பது ஆண்டுகளில் ஆசிரியர்களால் போதிக்கப்படும் அளவுக்கு ஒரு வரலாறாக மாறும் என்று பெரும்பாலானோர் கருதுகின்றனர் என ஊடகம் ஒன்று குறிப்பிட்டுள்ளது.

No comments

Powered by Blogger.