Header Ads

பிரான்ஸில் அமுலாகும் புதிய பிரெஞ்சுச் சட்டம் ! கவனம்! கவனம்! கவனம்!

 


சேவல் சத்தமாய் கூவுவதால் என் தூக்கம் கலைகிறது” , “பலத்த கூச்சல் போடும் குளத்துத் தவளைகளால் என் நிம்மதி தொலைகிறது” , “வீட்டுக்குப் பக்கத்தில் சாணம் மணக்கிறது”.. “கூரையில் புறாக்கள் புறுபுறுக்கின்றன..”வீதி வளைவில் கழுதை கனைக்கிறது…”வயலில் சூடடிக்கும் சத்தம் என் ஜன்னலில் கேட்கிறது… “.. கோவில் மணி ஓசை கிட்டவாய் ஒலிக்கிறது..”

இப்படியெல்லாம் அயலோடு குற்றம் குறைபட்டுக் கொண்டு யாரும் இனிமேல் நீதிமன்றங்களை நாடமுடியாது.கிராமங்களில் இது சகஜம். இந்த உணர்வுப் பாரம்பரியத்தோடு சேர்ந்து வாழுங்கள்..இவ்வாறு நகரங்களில் இருந்து வருவோருக்குப் புத்தி சொல்கிறது புதிய பிரெஞ்சுச் சட்டம்.

கிராமச் சூழல்கள் சார்ந்த உணர்வு களுக்கென்று தனியான பாரம்பரியம் இருக்கிறது. நகரமயமாகி வருகின்ற உலகில் கிராம உணர்வுப் பாரம்பரியங் களைத் தக்க வைப்பதற்குப் பெரும் போராட்டங்களை நடத்தவேண்டி இருக்கிறது. பிரெஞ்சுக் கிராமத்தவர் களின் அத்தகைய நீண்ட காலப் போராட்டங்களுக்கு இப்போது பலன் கிடைத்துள்ளது. பிரான்ஸின் கிராமங்களில் அவற்றின் உணர்வுப் பாரம்பரியமான சில விடயங்களுக்குச் சட்டப்பாதுகாப்பை வழங்கும் பிரேரணை ஒன்று நாடாளுமன்றத்தில் ஏகமனதாக நிறைவேறி உள்ளது.

பிரெஞ்சு மொழியில் ‘La loi visant à protéger le patrimoine sensoriel des campagnes’ என்று பெயரிடப்பட்ட அந்தச் சட்டம் கிராமங்களின் வாசனைகள், ஒலிகள், விவசாய நடவடிக்கைகளுக்குச் சட்டரீதியான பாதுகாப்பை வழங்கும்.மாடுகள், மந்தைகளின் சத்தம்.. சேவல் கொக்கரிப்பு,கழுதைகளின் வாசனை, மணி ஓசை, மரம் அரியும் ஆலையின் சத்தம், இரவில் செய்யும் விவசாய நடவடிக்கைகளின் ஒலிகள், சாணத்தின் மணம்.. தவளைகளின் ஒப்பாரி.. குதிரைகளின் குளம்பு ஒலி.. இப்படிப் பலவிதமான கிராமங்களின் உணர்ச்சிப் பாரம்பரியங்களை இனிமேல் யாரும் சட்டச் சிக்கலுக்கு இழுக்க முடியாது.

தனிமையையும் வெறுமையையும் பெருக்கும் நகர வாழ்வை விட்டு வெளியேறிக் கிராமப் புறங்களில் சொத்துக்களை வாங்கிக் கொண்டு குடியேறுவோர் அங்கு கிராமங்களின் தனி இயல்புகளுடன் அடிக்கடி முரண்படுகின்றனர்.நகர வாழ்வின் நெரிசல் மிகுந்த குடியிருப்புகளில் இரவு பத்து மணிக்குமேல் யாரும் அயலவருக்கு இடையூறாகச் சத்தம் எழுப்புவதை சட்டங்கள் தடுக்கின்றன.

நீண்டகாலம் நகர வாழ்க்கைக்குப் பழக்கப்பட்டு விட்டவர்கள் கிராமங்களுக்குச் சென்று வாழ்க்கையைத் தொடங்கும் போது அங்கு சூழலில் இயல்பாக உள்ள இயற்கையான ஓசைகள், ஒலிகளை தங்களுக்கு இடைஞ்சலாக உணர்கின்றனர்.அடுத்த வீடுகளுடன் அயல் சண்டைகள் வெடித்து விவகாரங்கள் நீதிமன்றம் வரை செல்கின்றன.

பக்கத்து வீட்டு சேவல் தினமும் காலையில் பலத்த சத்தமாய் கூவித் தனது தூக்கத்தைக் கெடுப்பதாகக் குற்றஞ்சாட்டி அயலவர் ஒருவர் தொடர்ந்த வழக்கு நாடளாவிய கவனத்தை ஈர்த்தது. ‘மொறிஸ்’ என்ற பெயர் கொண்ட அந்தச் சேவல் நீதிமன்றம் வரை சென்று வழக்கில் வென்று உலகப் பிரபலம் பெற்றது.பிரான்ஸின் கிராமங்களில் இருந்து இதுபோன்ற அயல் சண்டை வழக்குகள் பற்றிய செய்திகள் தினமும் வருகின்றன.

கிராமம் ஒன்றுக்கு நகரில் இருந்து வந்த உல்லாசப் பயணிகள் தாங்கள் தங்கியிருந்த இடத்துக்குப் பக்கத்தில் தெருக்களில் சாணம் கிடப்பதைக்கண்டு முறையிட்டனர். இன்னுமொரு சம்பவத்தில் சிறிய தேவாலயம் ஒன்றின் மணி தினமும் காலையில் ஏழு மணிக்கு ஒலிப்பதை ஆட்சேபித்து அந்த நேரத்தை மாற்றுமாறு கேட்டனர்.உள்ளூர் நிர்வாகத்தின் தலைவர் அதற்குச் செவிசாய்க்க மறுத்துவிட்டார்.

உள்ளூராட்சி சபைத் தலைவர் ஒருவர் வீதிகளில் “வளைவு வருகிறது கவனம்” என்று எச்சரிக்கை அறிவிப்புப் பலகை வைப்பதுபோல் “கிராமம் வருகிறது கவனம்” எனப் பயணிகளை எச்சரிக்கும் பாணியில் அறிவிப்புப் பலகை ஒன்றை தனது கிராமத்தின் நுழைவாயிலில் பொருத்தி சர்ச்சையைக் கிளப்பினார்.

குதிரைகள், கழுதைகளின் லாயங்களில் இருந்து கெட்ட மணம் வீசுவதாக முகம் சுழிப்போருக்குப் பதிலடி கொடுப்பதற் காகவே அந்த உள்ளூர் மக்களின் பிரதிநிதி அப்படிச் செய்தார்.

கிராமங்களில் அவற்றின் தனித்துவங்களைக் கேள்விக்கு உள்ளாக்குகின்ற இத்தகைய முரண்பாடுகளுக்குத் தீர்வு காணவும் கிராமங்களின் சூழல் சார்ந்த உணர்வுப் பாரம்பரியங்களைப் பேணிப் பாதுகாக்கின்ற நோக்குடனுமே புதிய சட்டத்தைப் பிரான்ஸின் நாடாளுமன்றம் நிறைவேற்றி உள்ளது.

கிராமங்கள் தத்தமது பகுதியின் உணர்வுப் பாரம்பரியமான ஒலிகள், வாசனைகளைப் பட்டியலிட்டுத் தயாரித்துப் பதிவேடு ஒன்றைப் பேணி அவற்றை பாதுகாப்பதற்குப் புதிய சட்டம் அனுமதிக்கிறது.

கிராமங்களில் வீட்டையோ வளவையோ வாங்கிக் கொண்டு குடியேற வருகின்ற நகர வாசிகள் சொத்துக்களை வாங்குவதற்கு முன்பாக அங்கு காணப்படுகின்ற அயல் அம்சங்களை ஏற்றுக்கொள்ள வேண்டிய கடப்பாடு டையவர்களாக இருப்பதை இச் சட்டம் உறுதிப்படுத்துகிறது. thaaiman edear

No comments

Powered by Blogger.