தீவிரடையும் கொரோனா அச்சுறுத்தல்! ஜெர்மனியில் ஊரடங்கு நீட்டிப்பு
கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக ஜனவரி இறுதிவரை ஜெர்மனியில் ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அந்நாட்டு அதிபர் ஏஞ்சலா மெர்கல் அறிவித்துள்ளார்.
2020 அக்டோபர் மாதம் முதல் ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரசின் 2ஆவது அலை தீவிரமாக பரவியது. ஜெர்மனியில் கொரோனா வைரசின் முதல் அலையை விட 2ஆவது அலை மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. அங்கு, நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்படுகின்றனர். நூற்றுக் கணக்கானோரின் உயிரிழக்கின்றனர்.
இதனால், கொரோனா கட்டுப்பாடுகளை கடுமையாக்குவது குறித்து ஜெர்மனி அரசு தீவிரமாக ஆலோசித்து வந்தது. இந்நிலையில், வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மீண்டும் நாடு தழுவிய ஊரடங்கை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, முழு ஊரடங்கு டிசம்பர் 16-ஆம் திகதி தொடங்கி ஜனவரி 10ஆம் திகதி வரை அமலில் இருக்கும் என ஜெர்மனி அரசு அறிவித்தது.
இதனால், சூப்பர் மார்க்கெட் போன்ற மிகவும் அத்தியாவசியமான கடைகள் மட்டுமே திறக்கப்பட்டடன. ஹோட்டல்கள், மதுபான விடுதிகள் உள்ளிட்டவை மூடப்பட்டன. வங்கிகள் திறந்திருக்கும் என்றும், பள்ளி கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் மூடப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், 2021 புத்தாண்டு தினத்திற்குப் பின்னரும் ஜெர்மனியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்தபடியே இருந்ததால், அதைக் கட்டுப்படுத்தும் விதமாக, ஜனவரி இறுதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அந்நாட்டு அதிபர் ஏஞ்சலா மெர்கல் அறிவித்துள்ளார்.
No comments