சுதந்திரத்திற்கு முன்பும் பின்பும் இலங்கை
சுதந்திரத்திற்கு முன்பும் பின்பும் இலங்கை முஸ்லிம்கள் கல்வியில் பல பிரச்சினைகளை எதிர் நோக்குகின்றனர் என பொதுச் சேவை ஆணைக்குழு உறுப்பினரும் தென்கிழக்குப் பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தருமான பேராசிரியர் ஏ. ஜி. ஹுஸைன் இஸ்மாயில் தெரிவித்தார்.
பிரபல எழுத்தாளரும் பகிரங்க சேவை ஆணைக்குழுவின் முன்னாள் அங்கத்தவருமான ஏ. எம். நஹியா எழுதிய இலங்கையில் முஸ்லிம் கல்வி ஷாபி மரிக்கார் சிந்தனையும் பங்களிப்பும் என்ற ஆய்வு நூலின் வெளியீட்டு விழா கொழும்பு சாஹிராக் கல்லூரி கபூர் மண்டபத்தில் நடைபெற்றது.
இவ்விழாவில் தலைமை வகித்து உரையாற்றுகையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கொழும்பு சாஹிராக் கல்லூரியின் முன்னாள் அதிபரும் அகில இலங்கை கல்வி மாநாட்டின் தவிசாளருமான மர்ஹும் எஸ்.எல்.எம்.ஷாபி மரிக்காரின் வாழ்க்கை வரலாற்றை உள்ளடக்கி இலங்கை முஸ்லிம்களின் கல்வி பற்றி எழுதப்பட்டுள்ள இந்த நூலின் வெளியீட்டு விழாவை அகில இலங்கை முஸ்லிம் கல்வி மாநாடும் சாஹிராக் கல்லூரி 90 ஆவது அணியினரும் ஏற்பாடு செய்திருந்தனர்.
பேராசிரியர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையில் ஐரோப்பியர் அறிமுகம் செய்த கல்வி முறை கிறிஸ்தவ சார்பாக இருந்ததால் தமது மதத்தின் தனித்துவத்தைப் பாதுகாக்க மிஷனரிக் கல்வியை குறிப்பாக உலகக் கல்வியை முஸ்லிம்கள் புறக்கணித்தனர். சமூகத்திற்காக கல்வியை தியாகம் செய்த ஒரு சமூகம் இலங்கை முஸ்லிம்கள் என சுமதிபால எனும் சிங்கள கல்வி அறிஞர் தனது நூலில் குறிப்பிடுகிறார். இது அப்போதைய சூழ் நிலையில் நாம் எடுத்த முடிவுகள் நியாயமானது என்பதை நிரூபிக்கிறது. ஆனால் சுதந்திரத்தின் பின் தேசிய கல்விமுறை அறிமுகம் செய்யப்பட்ட பின்பும் முஸ்லிம் சமூகம் இந்த முடிவுகளை மாற்றாமல் இருந்ததன் காரணமாக நாம் 50 வருடங்கள் கல்வியில் பின்னடைந்தோம்.
ஒராபிபாஷா, சித்திலெப்பை, அப்துல்காதர், அப்துல்ரஹ்மான், வாப்பிச்சிமரிக்கார், சேர். றாஷிக் பரீத், கலாநிதி அஸீஸ் போன்றவர்கள் இந்த மனநிலையை மாற்றுவதற்கு பல முயற்சிகளைச் செய்தார்கள். அதன் காரணமாக இந்த மனநிலையில் ஒரு மாற்றம் ஏற்பட்டது. முஸ்லிம்கள் பாடசாலைகளை ஆரம்பித்தனர். கல்வியில் அக்கறை அதிகரித்ததது. பிற்காலங்களில் டாக்டர் பதியுதீன் மஹ்மூத் பேன்றவர்கள் முஸ்லிம் பாடசாலைக்களில் கல்விக்கான வசதிகளை அதிகரிப்பதறனால் அவர்களுடைய ஆர்வம் மேலும் அதிகமாகியது. பிற்காலங்களில் அகில இலஙகை முஸ்லிம் லீக் டீ. பி. ஜாயா டாக்டர் கலீல் போன்றவர்களின் தலைமையில் முஸ்லிம்களின் கல்விப் பிரச்சினை பற்றி கலந்துரையாடி சில முடிவுகளைச் செய்தது.
1946 க்குப் பின் முஸ்லிம் லீக் 4 தேசிய கல்வி மாநாடுகளை இலங்கையின் பல பகுதிகளிலும் நடத்தியுள்ளது. முஸ்லிம் பாடசாலைகளுக்கு முஸ்லிம் தலைமை ஆசிரியர்களை நியமித்தல், மௌலவி ஆசிரியர் நியமனம், முஸ்லிம் மாணவர்களுக்கான பாடசாலைச் சீருடை, போதனா மொழி, முஸ்லிம் பெண் ஆசிரியர்களுக்கான இப்தார் விடுமுறை, ஹஜ் செய்வதற்கான விடுமுறை போன்ற பல பிரச்சினைகள் முஸ்லிம் சமூகத்துக்கு காணப்பட்டதால் முஸ்லிம்களின் கல்விக்கு தனியான ஓர் அமைப்பு ஏற்படுத்த வேண்டும் என முடிவு செய்தது. இந்தப் பணியை அப்போது ஸாஹிராக் கல்லூரியில் பணி புரிந்த எஸ்.எல்.எம்.ஷாபி மரிக்காரிடம் ஒப்படைக்கப்பட்டது.
ஷாபி மரிக்கார் 1964இல் அகில இலங்கை முஸ்லிம் கல்வி மாநாட்டை ஆரம்பித்து அதன் தவிசாளராக 40 வருடங்கள் அதை வழி நடத்தினார். மாநாட்டின் ஆரம்பத் தலைவராக முன்னாள் சபாநாயகர் எச்.எஸ்.இஸ்மாயில் கடமை புரிந்தார். கடந்த 50 வருடங்களாக கல்வி மாநாடு இலங்கை முஸ்லிம் கல்விமான்கள், அரசியல் தலைவர்களை ஒன்று கூட்டி கலந்துரையாடி கருத்துக்களைப் பகிந்த பின் முடிவுகளை எடுத்து அரசின் கவனத்திற்கு கொண்டு வந்தது. மிக நிதானமாக, சாதாரணமாக பெரும்பான்மை அரசியல் தலைவர்களின் அனுசரணையோடு பெரும்பான்மை சமூகத்தைக் குழப்பாது கலாசரத் தேவைகளை மற்றும் முஸ்லிம் கல்வித் தேவைகளை வென்றெடுத்தது.
தற்போது நாட்டில் கல்விப் பிரச்சினைகள் பற்றி அரைகுறையாகக் கற்ற ஒரு சிலர் இதில் தலையிடுவதும் முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு பிழையான தகவல்களை வழங்குவதும் மேலும் கல்விக்கான உரிமைகளைப் பெற்றுக் கொடுப்பதில் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. இதனை பெரும்பான்மை சமூகம் இப்போது அச்சத்தோடு பார்க்கிறார்கள். வெறுப்புடன் பார்க்கிறார்கள்.
ஆகவே இந்தப் பணியைத் சீராகத் தொடர்வதற்கு கல்வி மாநாட்டிடம் விட்டு விடுங்கள் நீங்களும் எங்களோடு சேர்ந்து உழையுங்கள்; பாடுபடுங்கள் என்றும் தெரிவித்தார்.
No comments