Header Ads

தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பிலிருந்து விலகுகிறோம்

தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பிலிருந்து விலகுகிறோம்

ஒற்றுமையின் பலமாக செயற்பட முன்வந்த முன்னாள் போராளிகளாகிய எங்களது நம்பிக்கையினை உடைத்தெறிந்ததன் மூலம் ஈபிஆர்எல்எவ்தமிழர் விடுதலைக் கூட்டணிக் கட்சிளுடனான கூட்டினை முன்னெடுக்கமுடியாத நிலையில் கூட்டு நடவடிக்கையிலிருந்து வெளியேறுவதாக தீர்மானித்துள்ளோம்.
தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு என்ற பெயரில் ஒற்றுமையை வலுப்படுத்தி ஆறு கட்சிகள் இணைந்து தேர்தலை சந்தித்தோம்இதற்கு அமைய கூட்டுக்கட்சிகளின் நடவடிக்கைகள் குறித்த ஒப்பந்தம் ஒன்றிலும் கைச்சாத்திட்டிருந்தோம்.
ஆனாலும் தேர்தல் நிறைவடைந்த மறுநாளே கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்தை ஈபிஆர்எல்எவ் கட்சி மீறியதன் தொடராக ஈபிஆர்எல்எவ் கட்சி தற்போது வரையில் தவறான முடிவுகளை சர்வாதிகாரப் போக்கில் முன்னெடுத்துவருகிறது.
கூடுதல் வாக்குகளைப் பெற்றதன் அடிப்படையில் மேலதிக ஆசனங்களை புனர்வாழ்வழிக்கப்பட்ட தமிழ் விடுதலைப்புலிகள் கட்சியினராகிய நாங்களே பெறுவதற்கான தகுதியினைப் பெற்றவர்களாக இருக்கிறோம்.
ஆனாலும் ஈபிஆர்எல்எவ் தன்னிச்சையாக முடிவெடுத்து மேலதிக ஆசனங்களை தமது விருப்பத்துக்கு ஏற்றவகையில் பங்கீடு செய்து வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்திருக்கின்றமை எங்களை அதிர்ப்தி அடைய வைத்திருக்கிறது
இதனைக் கண்டும் காணாமல் இருக்கின்ற தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் ஆகிய வீ.ஆனந்தசங்கரி அவர்களின் நடவடிக்கையும் எங்களை விசனம் அடையவைக்கு முயற்சிக்குத் தள்ளியுள்ளது.
திருகோணமலை மாவட்டத்தில் மூதூர் மற்றும் வெருகல் பிரதேச சபைகளில் போட்டியிட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியானது ஈபிஆர்எல்எவ் கட்சியைவிட அதிக வாக்குகளை பெற்றிருந்தது. இரு பிரதேச சபைகளிலும் எமது கூட்டணிக்கு கிடைத்த மேலதிக ஆசனங்களை பங்கிடும்போது  கூடுதல் வாக்குகளைப் பெற்ற கட்சி என்ற அடிப்படையில் எமது கட்சிக்கே முன்னுரிமை வழங்கப்பட்டிருக்கவேண்டும்.
ஆனால் ஈபிஆர்எல்எவ் கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தன்னிச்சையாக செயற்பட்டு மூதூரில் கிடைத்த மேலதிக ஆசனத்தை தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியடைந்த   தனது கட்சி அமைப்பாளருக்கு வழங்கியதுடன் வெருகல் பிரதேச சபையில் போட்டியிட்டுத் தோல்வியடைந்த எமது கட்சியைச் சேர்ந்த ஒருவரை எங்கள் அனுமதியில்லாமல் உள்வாங்கி அங்கு கிடைத்த மேலதிக ஆசனத்தை அவருக்கு வழங்கியள்ளார்.அத்துடன்   திருகோணமலையில் எங்கள் கட்சியின் ஆலோசகராகச் செயற்பட்ட பிரகாஸ் என்பவரை தனது கட்சிக்குள் உள்வாங்கி அவருக்கும் திருமலை நகரசபையில் கிடைத்த ஒரு மேலதிக ஆசனத்தை வழங்கியுள்ளார்.

கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஒரு கட்சியிலிருந்து இன்னொரு கட்சிக்கு ஒருவர் இணையவிரும்பினால் அவர் அங்கம் வகித்த கட்சியின் தலைமையில் ஒப்புதல் இன்றி மற்றைய கட்சி உறுப்பினரை உள்வாங்க முடியாது என்பது தேர்தலுக்கு முன்பு நாம் கையொப்பமிட்ட உடன்படிக்கையில் ஒரு சரத்துஇச் சரத்தை மீறி பதவி கொடுத்து இருவரை எமது கட்சியிலிருந்து தனது கட்சியில் இணைத்துள்ளார் திருசுரேஸ் பிரேமச்சந்திரன் அவர்கள்.
இந்த விடயங்கள் தொடர்பில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் ஆனந்தசங்கரியிடம் நேரில் சென்று தெளிவுபடுத்தியிருந்தோம். ஆனபோதிலும் மீண்டும் தொடர்புகொண்டு இந்தவிடயம் தொடர்பில் கேட்டபோது, ஒரு நாள் முன்பாகவே பட்டியல் அனுப்பப்பட்டுவிட்டதாக தெரிவித்திருந்தார். இது குறித்து எங்களுக்கு தெரியப்படுத்தவில்லையே எனக் கேட்டபோது தொலைபேசி இணைப்பு துண்டிக்கபட்டுவிட்டதாக காரணம் சொன்னார். அதேபோலவே சுரேஸ்பிரேமச்சந்திரனும் காரணம் சொன்னதுடன் கதைத்துக்கொண்டிருக்கும் போதே தொலைபேசி இணைப்பைத் துண்டித்தார். இவ்வாறான மோசமான அரசியல்பண்பாளர்களாக அவர்கள் இருவரும் செயற்பட்டமை எங்களை அதிர்சியடைய வைத்துள்ளது.
இதேபோல தேர்தல் முடிவடைந்த பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து கலந்தாலோசிப்பதற்கான எந்தவித நடவடிக்கைகளையும் எவரும் முன்னெடுக்கவில்லை.. இந்த நிலையில் திருகோணமலையில் இருக்கும் நாங்கள் யாழ்ப்பாணம் சென்று சுரேஸ்பிரேமச்சந்திரன் அவர்களை சந்தித்துக் கலந்துரையாடுவதற்காக முயற்சி செய்திருந்தோம்.
ஆனாலும் தான் கூட்டம் ஒன்றில் இருப்பதாக தெரிவித்து தொலைபேசியை துண்டித்த அவர் அதன் பின்னர் அந்த அழைப்புத் தொடர்பில் கவனம் செலுத்தவேயில்லை.நாங்கள் மீண்டும் பல தடவை அழைப்பை ஏற்படுத்த முயற்சித்தபோது எமது அழைப்புக்களை அவர் துண்டித்துக்கொண்டிருந்தார்.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தேர்தல் காலத்தில் பரபரப்பாக செயற்பட்டுவிட்டு தேர்தல் முடிந்ததும் கையாலாகாதவர்கள் போல செயற்படுவது போலவே சுரேஸ்பிரேமச்சந்திரனும் செயற்படுவதை எங்களால் அவதானிக்க முடிந்தது.

நாடாளுமன்றத்துக்கு தேசியபட்டியல் ஊடாக தெரிவு செய்யப்படவில்லை என்பதாலேயே சுரேஸ் பிரேமச்சந்திரன் கூட்டமைப்பிலிருந்து வெளியேறியதாக குற்றம்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுவந்த நிலையில் இந்தச் சம்பவத்தின் செயற்பாடு அதனை உறுதிப்படுத்துவது போலவே அமைந்திருப்பதாக எண்ணுகிறோம்.

தற்போது எமக்கு நிகழ்ந்துள்ள சிறிய விவகாரத்தினையே சரியான முறையில் தீர்த்துவைக்க முடியாதவர்களாகிய இவர்கள்எவ்வாறு தேசியப் பிரச்சினையை கையாளப் போகிறார்கள் என்ற கேள்வி எங்கள் முன்நிலையில் வலுவாக எழுந்து நிற்கிறது.

இதன் அடிப்படையில் இந்தப் பிரச்சினையை தீர்ப்பதற்கான ஒரு வழிமுறையை நாங்கள் முன்வைத்திருந்தோம்அந்த வழிமுறைகளின் மூலம் தற்போது எழுந்துள்ள பிரச்சினையை தீர்த்துவைக்கலாம் என நம்பினோம்,

எமது உறுப்பினர்களுக்கு மூதூர் கிழக்கு பகுதியில் இரண்டு வருடங்களுக்கான உறுப்புரிமையினை வழங்குமாறு கேட்டுக்கொள்வதுடன் வெருகல் பகுதியில் முழுமையான பதவிக்காலத்தினை தருமாறு கேட்டிருந்தோம்.

இந்த விடயத்தினை பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதன் மூலம் எதிர்கால நடவடிக்கைகளை ஆரோக்கியமானதாகவும் சாதகமானதாகவும் கொண்டு செல்ல முடியும் என்று நாங்கள் தெரிவித்திருந்தோம்.


ஆனபோதிலும் எந்தவிதமான ஆக்கரீதியான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லைமாறாக எங்களை கருத்துச் சொல்லவேண்டாம் என்றும் இந்த விடயங்களை வெளியில் இருக்கும் எங்களுடைய கட்சி சார் நலன்விரும்பிகளுக்கு தெரிவிக்கவேண்டாம் என்றுமே சுரேஸ் பிரேமச்சந்திரன் அவர்களால் அழுத்தம் பிரயோகிக்கப்பட்டுவருகின்றது.

தேர்தல் நடவடிக்கைகளுக்காக எந்தவித ஆக்கபூர்வமான முனைப்புக்களையும் மேற்கொள்ளாது எங்கள் உழைப்பின் மூலம் பெறப்பட்ட வெற்றியைக் கூட தட்டிப்பறிக்கும் மனோநிலையில் இருக்கும் இவர்களுடன் சேர்ந்த பயணிப்பது என்பது சாத்தியமில்லையென்பதால் தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு என்கிற கூட்டு முயற்சியிலிருந்து நாங்கள் வெளியேறுகிறோம் என்பதை பகிரங்கமாக அறிவிக்கிறோம்.
அன்பான மக்களே,
போருக்காக எங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்தவர்களாகிய நாங்கள்,சமூகத்திற்கான வேலைத்திட்டங்களுக்காகவும் தீர்வு முயற்சிகளுக்காகவும் திறந்தமனதோடு செயற்படுவோம் என்பதை தங்களுக்கு உறுதியளிக்கிறோம்.
நாங்கள் தொடர்ந்தும் முன்னெடுக்கவுள்ள எங்கள் அரசியல் பயணத்திற்கு உங்கள் ஒவ்வொருவருடைய முழுமனதோடு கூடிய ஒத்துழைப்புக்களையும் எதிர்ப்பார்த்துக் காத்திருக்கின்றோம்.
நன்றி
என்றும் உங்கள் பிள்ளைகள்..
புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப்புலிகள்

No comments

Powered by Blogger.