Header Ads

இன நல்லுறவுக்காக உழைக்கும் பிலால் கலீல் ஹாஜியார்
இன நல்லுறவுக்காக உழைக்கும் பிலால்  கலீல் ஹாஜியார் ஒரு மனித நேய செயற்பாட்டாளராக செயற்பட்டு வருகின்றார்.

முஸ்லிம்கள் எங்கு பாதிக்கப்பட்டாலும் முதலில் ஓடோடிச் சென்று அவர்களுக்கு புதிய ஆடைகளை வழங்குவதும் அவர்களுக்கு முடியுமான உதவிகளை வழங்குவதும் இவரது நடைமுறையாகும்.

இவரின் இந்த செயற்பாடானது முஸ்லிம்களுக்கு மாத்திரமல்ல நமது சகோதர இனமான தமிழ் மக்கள் பாதிக்கப்படும் போதும் இதே மனித நேய உதவியை செய்து வருகின்றார்.

அந்த வகையில் கண்டி திகனவில் முஸ்லிம்கள்; இனவாதிகளினால் தாக்கப்பட்ட போது தனது கடையில் புதிய ஆடைகளை எடுத்துக் கொண்டு அங்கு சென்று அதனை பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதன் முதலில் வழங்கினார். இவருடைய இந்த செயற்பாடே இவரைப்பற்றி என்னை எழுத தூண்டியது.

காத்தான்குடி ஆறாம் குறிச்சியைச் சேர்ந்த கச்சிமகம்மது முகம்மது கலீல் எனும் முழுப் பெயருடைய  பிலால்  ஹாஜியார் மானசீகமாக உதவி செய்யும் ஒரு மனித நேய செயற்பாட்டாளர்.

தமிழ் ஆங்கிலம் சிங்களம் மூன்று மொழிகளிலும் தேர்ச்சி பெற்ற இவர் மட்டக்களப்பிலுள்ள தமிழ் சகோதரர்களுடன் நெருக்கமான நல்லுறவை பேணி வருவதுடன் சிங்கள மக்களுடனும் இணைப்பை வைத்துள்ளார்.

தனது ஆரம்பக்கல்வியை பதுளை அல் அதான் வித்தியாலயத்திலும் அதன் பின்னர் பண்டாரவளை புனித யோசப் கல்லூரியிலும் கல்வி கற்ற இவர் பின்னர் கல்விப் பொதுத்தராதர உயர்தர கல்வியை கொழும்பு மருதானை சாஹிறா கல்லூரியிலும் கற்றுக் கொண்டார்.

1980ம் ஆண்டு வர்த்தகத்துறைக்கு வந்த இவர் 38 வருடங்களாக வர்த்தக் துறையில் ஈடுபட்டு வருகின்றார்.

மட்டக்களப்பில் பிலால்  எம்போரியம் என்ற வர்த்தக நிறுவனத்தை ஆரம்பத்தில் நிறுவிய இவர் பின்னர் அதனோடு இணைந்தவாறு இரண்டு வர்த்தக நிறுவனங்களையும் நிறுவினார்.

மட்டக்களப்பில் தமிழ் மக்களுடனும் தமிழ் அதிகாரிகளுடனும் தமிழ் சிவில் சமூக செயற்பாட்டாளர்களுடனும் தமிழ் அரசியல் வாதிகளுடனும் சமய பிரமுகர்களும் நெருக்கமான இணைப்பையும் தொடர்பையும் இவர் வைத்துள்ளார்.

இதனால் பிலால்  கலீல் ஹாஜியாரை தெரியாதவர்கள் யாரும் அங்கு இருக்க முடியாது.

இஸ்லாமிய மார்க்க விழுமியங்களுடன் நடந்து கொள்ளும் இவர் எங்கு சென்றாலும் எந்த ஒரு வைபவத்தில் கலந்து கொண்டாலும் முஸ்லிம்களின் தனித்துவ அடையாளமான தொப்பியை தலையில் அணிந்தே செல்வார். இது இவரின் சிறப்பம்சமாகும்.

மட்டக்களப்பு ஜாமியுஸ்ஸலாம் 
ஜும்ஆப்பள்ளிவாயலின் தலைவராக இருந்துள்ளதுடன் அந்தப் பள்ளிவாயலின் முன்னேற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் பாடுபட்டார்.

மட்டக்களப்பு இஸ்லாமிய வர்த்தக நலன்புரி அமைப்பினை நிறுவியதுடன் அதன் தலைவராகவும் இருந்து வருகின்றார்.

மட்டக்களப்பு சல்வமத அமைப்பான பல் சமய ஒன்றியம் மட்டக்களப்பு வர்த்தக கைத்தொழில் சம்மேளனம், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை குழுவின் உறுப்பினராக இருந்து வரும் இவர் மட்டக்களப்பு சிறைச்சாலைகள் நலன்புரி அமைப்பின் ஆயுட்கால உறுப்பினராக இருந்து அங்குள்ள கைதிகளுக்கு நலன்புரி நடவடிக்கைகளையும் இவர் அடிக்கடி மேற்கொண்டு வருகின்றார்.

காத்தான்குடி ஜாமியத்துல் பலாஹ் அறபுக்கல்லூரியின் உப தலைவராகவும் காத்தான்குடி சிறுவர் இல்லத்தின் நிருவாக உறுப்பினராக இருப்பதுடன் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளத்தின் ஆரம்பகாலம் முதல் இன்று வரை உறுப்பினராகவும் உள்ளார்.

அகில இலங்கை சமதான நீதவானான இவருக்கு மனித நேயக் காவலர் எனும் சிறப்பு பட்டமும் வழங்கப்பட்டுள்ளது.

அத்தோடு ஸ்ரீ கல்யாண வம்சய மகா நிக்காய எனும் பௌத்த மத அமைப்பினால் சமயங்களை நேசித்து சகவாழ்வை ஏற்படுத்தும் மனிதர்(சமயாந்தர சக ஜீவனாத் காமி) என்ற சிறப்பு பட்டம் மட்டக்களப்பு மங்களா ராமய பௌத்த விகாரையில் வைத்து வழங்கப்பட்டது. இவருக்கு தேச கீர்த்தி எனும் சிறப்பு பட்டமும் வழங்கப்பட்டது.

இது வரைக்கு 50க்கு மேற்பட்ட நூல்களை வாங்கி எழுத்தாளர்கள் கவிஞர்கள் கலைஞர்களை இன மதம் பார்க்காமல் கௌரவித்துள்ளார்.

கடந்த காலங்களில் ஏற்பட்ட அனர்த்தங்கள் யுத்த அனர்த்தம் போன்றவற்றின் போதெல்லாம் மக்களுக்கு மனிதாபின ரீதியாக உதவுவதில்  முன் நின்று உழைத்துள்ளதுடன் தமிழ் மக்கள் படுவான்கரையிலிருந்து யுத்தத்தினால் இடம் பெயர்ந்த போது அவர்களுக்கும் பல உதவிகளை செய்ய முன் நின்றார்.

இவருடைய மனித நேய செயற்பாட்டு பணி தொடர வாழ்த்துவதுடன் அல்லாஹ் அவருக்கு நீடித்த ஆயுளை வழங்குவானாக(ஆமீன்)

No comments

Powered by Blogger.