Header Ads

அரசியல் சண்டைகளை புறந்தள்ளி, எமது சமூகத்தின் எதிர்காலம் பற்றி சிந்திப்போம்..!





இன்று அதிகமான முஸ்லிம் இளைஞர்களது சமூக வலைத்தள பதிவுகளை அவதானிக்கின்ற போது பாரிய பிரச்சினையாக, அமைச்சர் ஹக்கீம் கலவரத்தின் போது சிறப்பாக செயற்பட்டாரா அல்லது அமைச்சர் றிஷாத் செயற்பட்டாரா என்ற தனிப்பட்ட அரசியல் இலாப பிரச்சினையும், பிரதி அமைச்சர் ஹரீஸ் மீதான ஒழுக்காற்று நடவடிக்கையுமே சென்று கொண்டிருக்கின்றது. இதுவா எமது பிரச்சினை? ( இக் கலவரத்தை வைத்து, முஸ்லிம் அரசியல் தலைவர்களை விமர்சிப்பதாக இருந்தால், வகை வகையாக விமர்சிக்கலாம். பிரச்சினைகளின் அடிப்படையே இவர்களில் தான் உள்ளது. இருந்த போதிலும், அது இந் நிலையில் பொருத்தமான செயற்பாடாக அமையாது ). தலை போகும் பிரச்சினை எங்கோ உள்ளது. நாமோ முடி அலங்காரத்தை சிந்தித்து, தலையை உடைத்து கொண்டிருக்கின்றோம். இவற்றை அவதானிக்கையிலேயே, எமது சமூகம் எந்தளவு அரசியல் வாதிகளினால் தவறாக வழி காட்டப்பட்டுக்கொண்டிருக்கின்றது என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.

 அழுத்கமையில் (அண்மைக் கால ஆண்டுகளில்) கலவரவமாக தோன்றிய பிரச்சினை கிந்தோட்டையும், அம்பாறையும் தாண்டி கண்டியில் தற்காலிகமாக ஓய்வு பெற்றுள்ளது. அடுத்து எங்கு வேண்டுமானாலும், எப்போது வேண்டுமாலும் தோன்றலாம். இம்முறை அம்பாறை முஸ்லிம் பிரதேசங்களிலும் எட்டிப் பார்த்த பிரச்சினை, அடுத்த தடவை உள் நுழைந்து, பாய் விரித்து படுத்துறங்க வந்து விடலாம். அங்கெல்லாம் பிரச்சினை வராது என்று நினைத்தால், அதனைப் போன்ற மடமை வேறு எதுவும் இருக்காது. இப்போது எமது சிந்தனைகள் அனைத்தும், எதிர்காலத்தில் இவ்வாறானதொரு பிரச்சினை வராமல் இருக்க என்ன செய்யலாம் என்பதாகவே அமைதல் வேண்டும். அது பற்றிய கலந்துரையாடல்கள் சந்து பொந்தெல்லாம் நடைபெற வேண்டும். வட்டை தேநீர் கடை ( வயல் பகுதி ) தொடக்கம் ஐந்து நட்சத்திர கொட்டல் வரை இந்த சம்பாசனைகள் செல்வதே, எமது சமூகத்தின் இருப்புக்கு பொருத்தமானது. அதனை விடுத்து வேறு பக்கம், எமது கவனத்தை திசை திருப்புவதானது `மிகவும் ஆபத்தானது.

 கண்டியில் சிங்கள நபரை தாக்கி மரணமடையச் செய்ததன் பின்னணியில், முஸ்லிம் பெயர் தாங்கிய சில குடி காரர்களின் தவறுகள் உள்ளன. நாம் மிகவும் காத்திரமான நடவடிக்கைகள் எடுத்து, இவ்வாறான செயல்களின் பாதகங்களை மக்களுக்கு விளக்கியிருந்தால், இது தொடர்பான கலந்துரையாடல்களை மேற்கொண்டிருந்தால், சில வேளை இப்படியான பிரச்சனைகளை தவிர்த்திருக்கலாம் . இது தொடர்பில், எதிர்வரும் கட்டுரைகளில் விரிவாக எழுதலாம் என்றுள்ளேன்.

No comments

Powered by Blogger.